

வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் தமிழகத்துக்கான விமானச் சேவை இல்லை. வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், உடனடியாகத் தமிழகம் திரும்ப, தமிழ்நாட்டிற்கான விமானச் சேவையை விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா ஊரடங்கில் வெளிநாடுகளில் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் மே 7-ல் இருந்து 5 நாட்களுக்குள் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பிரத்யேகமாக இயக்கிய விமானங்கள் மூலம் 6,037 இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியுள்ளனர்.
வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியக் குடிமக்களைத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான மிகப் பெரிய முன்னெடுப்பு முயற்சியாக வந்தே பாரத் மிஷன் திட்டத்தை இந்திய அரசு மே 7-ம் தேதி அன்று தொடங்கியது.
இந்தத் திட்டத்தின் கீழ் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகமானது வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை அவர்களது தாய்நாட்டிற்குத் திரும்ப அழைத்து வருவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.
அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மலேசியா உட்பட 12 நாடுகளில் இருந்து முதல் கட்டமாக 14,800 இந்தியர்களை இந்தியாவிற்குத் திரும்ப அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் தனது துணை நிறுவனமான ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனத்துடன் இணைந்து 64 விமானங்களை (42 ஏர் இந்தியா விமானங்கள், 24 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள்) இயக்குகின்றது.
ஆனால், இவ்வாறு அழைத்துவரப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான வந்தே பாரத் விமானச் சேவை திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கான சேவை வழங்கப்படவில்லை என்று வெளிநாடுவாழ் தமிழர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு இப்பிரச்சினை கொண்டு வரப்பட்டு நாடாளுமன்ற திமுக மக்களவைக் குழுத் தலைவர் டிஆர் பாலு மூலம் வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதப்பட்டது..
ஆனாலும் மீண்டும் அதே நிலை தொடர்வதாக ஐக்கிய அமீரக திமுக அமைப்பாளர் மீரான் உள்ளிட்டோர் திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு வந்ததை அடுத்து இதுகுறித்து விமானப் பட்டியலை வெளியிட்டு ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவு:
''வந்தே பாரத் மிஷனின் இந்தப் பயண அட்டவணையில் தமிழ்நாட்டிற்கு விமானச் சேவை வழங்கப்படவில்லை என்பதை மிகுந்த கவலையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள், உடனடியாகத் தமிழகம் திரும்ப, தமிழ்நாட்டிற்கான விமானச் சேவையை விரைந்து ஏற்பாடு செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைக் கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.