

சிவகங்கை மாவட்டத்தில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஊதியம் வழங்காததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் நீர்நிலைகள் புனரமைத்தல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், மரக்கன்று நடுதல், கழிப்பறை, அங்கன்வாடி மையம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தொடக்கத்தில் மனித சக்தி மூலமே பணிகள் நடந்தநிலையில், தற்போது இயந்திரங்கள் மூலமாகவும் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன.
மேலும் இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. தொடக்கத்தில் வாரம் ஒரு முறை ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது மாதக் கணக்கில் நிலுவை உள்ளது. இதுபோன்ற காரணங்களால் சிவகங்கை மாவட்டத்தில் தற்போது ஊராட்சிக்கு 100 பேர் பணிக்கு வருவதே சிரமமாக உள்ளது.
கரோனா தொற்று ஆரம்பிப்பதற்கு முன்பே பல ஊராட்சிகளில் ஊதியம் வழங்கவில்லை. மாவட்டம் முழுவதும் தொழிலாளர்களுக்கு மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஊதிய நிலுவை உள்ளது. அதேபோல் இயந்திரங்கள் மூலம் செய்த வேலைகளுக்காக ஒப்பந்தாரர்களுக்கு பல கோடி ரூபாய் பாக்கி உள்ளது.
தற்போது 50 வயதிற்கு குறைவானவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. அவர்களுக்கும் வாரந்தோறும் ஊதியம் வழங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து ஊரகவளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ,‘ நிதி ஒதுக்கீடு தாமதத்தால் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. தற்போது நிதி வரப்பட்டதால் ஓரிரு நாட்களில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். அதேபோல் ஒப்பந்ததாரர்களுக்கும் நிலுவைத்தொகை வழங்கப்படும், என்று கூறினார்.