Published : 13 May 2020 07:12 PM
Last Updated : 13 May 2020 07:12 PM

ஆதரவற்றோருக்கு உணவு; ஏழைகளுக்கு நிவாரணப் பொருட்கள்!- கரோனா துயரத்திலும் கைகொடுக்கும் ராணுவ வீரர்கள்

ஏழைகளின் வீடுகளைத் தேடி வந்து உதவுகிறார்கள் அந்தப் படையினர். வாட்டசாட்டமான உடலுடன், பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி நிவாரணப் பொருள்கள் வழங்குவது வரை அத்தனை நேர்த்தி. பின்னே ராணுவ வீரர்கள் என்றால் சும்மாவா? குமரியைப் பூர்வீகமாகக் கொண்ட முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்களின் சேவை அமைப்பான கன்னியாகுமரி ஜவான்ஸின் கரோனா கால சேவை இது!

ஏற்கெனவே குமரி மாவட்டத்தில் சாலையோர நிழற்குடைகளைச் சீரமைப்பது தொடங்கி, மாவட்டத்தின் பசுமையைக் காக்க மரங்களை நடுவது வரை தொடர் பணிகளில் அர்ப்பணிப்பு உணர்வோடு ஈடுபட்ட இவர்கள், இப்போது கரோனாவில் ஏழைகளுக்கு உதவுவதிலும் முன்வரிசையில் நிற்கிறார்கள். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே சாலையோர ஆதரவற்றோர்களுக்கு உணவு கொடுத்து வரும் இவர்கள், இப்போது 1,300 ஏழைக் குடும்பங்களையும் தேர்ந்தெடுத்து மளிகைப் பொருள்களையும், காய்கனிகளையும் நிவாரணமாக வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘கன்னியாகுமரி ஜவான்ஸ்’ அமைப்பினர் , “தாய்நாட்டுக்காக எவ்வளவோ தியாகம் பண்றோம். தாய் மண்ணுக்கு இதைக்கூட செய்யலைன்னா எப்படி? எங்கள் குழுவில் இருக்கும் அத்தனை பேரும் குமரி மாவட்டத்துக்காரர்கள். எல்லைப் படை வீரர்கள், ராணுவம், துணை ராணுவத்தில் பணிபுரியும் வீரர்கள், அண்மையில் ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் இணைந்து ‘கன்னியாகுமரி ஜவான்ஸ்’ எனும் அமைப்பை உருவாக்கினோம்.

குமரி மாவட்டத்திலிருந்து ராணுவத்துல 3,500 பேருக்கும் மேல் வேலை செய்றோம். ஆனா, எங்களுக்குள் சரியான தகவல் தொடர்பு, அறிமுகம் என எதுவும் இல்லை. போன வருடம் பிப்ரவரியில நடந்த புல்வாமா தாக்குதல் எங்களையெல்லாம் கொந்தளிக்க வைத்தது. அதில் பலியானவர்களில் இரண்டு பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க. அந்த நேரத்துல லீவுல ஊருக்கு வந்திருந்த ஜவான்கள் சேர்ந்து பலியான வீரர்களுக்குக் குழித்துறையில கண்ணீர் அஞ்சலி ஃப்ளக்ஸ் வைச்சாங்க.

அதுதான் முதல் பொறி. சொந்த ஊருக்கு ஏதாச்சும் செய்யணும்னு நினைச்ச எல்லா ஜவான்களும் ஒண்ணு சேர்ந்தோம். அப்படி உருவானதுதான் இந்த ’கன்னியாகுமரி ஜவான்ஸ்’ அமைப்பு. குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களை இணைச்சு பத்துக்கும் அதிகமான வாட்ஸ் அப் குழுக்களை அமைச்சிருக்கோம். ‘லீவு குரூப்’னனு தனியா ஒரு குரூப் இருக்கு. லீவுல ஊருக்குப் போறோம்னு தகவல் சொல்றவங்களை மட்டும் இந்த குரூப்ல சேர்த்து விடுவோம். லீவு முடிஞ்சு கிளம்புனதும் அவங்களாகவே அந்த குரூப்ல இருந்து வெளியேறிடுவாங்க. அதனால், எத்தனை பேரு லீவுக்கு வந்திருக்காங்கன்னு எங்க எல்லாருக்கும் தகவல் தெரிஞ்சிடும். அதுக்கு ஏத்த மாதிரி ப்ளான் பண்ணி வேலையில இறங்குவோம். ஏற்கெனவே லீவுக்கு வரும்போதெல்லாம் குமரி மாவட்டத்தில் பல சமூக சேவையிலும் ஈடுபட்டுவந்தோம்.

அப்படித்தான் இந்த கரோனா காலத்திலும் சேவை செய்ய முடிவெடுத்தோம். பொதுமுடக்கம் அறிவிச்ச முதல் நாளில் இருந்து இதுவரை தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான சாலையோர வாசிகளுக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு வழங்கறோம். இதேபோல் முகக்கவசங்களும் வாங்கி விநியோகித்தோம். மாவட்டத்தில் மொத்தமாக 1,300 குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட பொருள்களை நிவாரணமாக வழங்கும் பணியில் இப்போது ஈடுபட்டுவருகிறோம். ஐந்து குழுக்களாக வீடு, வீடாகப் போய் இந்தப் பணிகளைச் செய்துவருகிறோம். எங்கள் மண்ணுக்கு எங்களால் முடிந்த சிறிய சேவை இது” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x