உயரழுத்த மின் இணைப்புக்கான கட்டணம் மே 26 வரை வசூலிக்க உயர் நீதிமன்றம் தடை

உயரழுத்த மின் இணைப்புக்கான கட்டணம் மே 26 வரை வசூலிக்க உயர் நீதிமன்றம் தடை
Updated on
1 min read

தமிழகத்தில் உயரழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளை ஏப்ரல் மாதத்துக்கு 90 சதவீத கட்டணத்தை செலுத்துமாறு மே 26 வரை நிர்பந்திக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கத்தின் தலைமை ஆலோசகர் கே.வெங்கடாசலம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

உயரழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள தொழிற்சாலைகளுக்கு மின் பளு அளவுக்கு தனி கட்டணமும், பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு தனி கட்டணமும் வசூலிக்கப்படும்.

பொது முடக்கத்தால் நூற்பாலைகளில் மார்ச் 24-ம் தேதி முதல் நூற்பாலைகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சிறியளவிலான பராமரிப்பு பணி, மின் விளக்ககுகள், பாதுகாப்பு பணி ஆகியவற்றிற்கு தான் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

வேலை முடக்க காலத்தில் மின்பளு அளவுக்கான கட்டணத்தில் 20 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மின்வாரிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதை மின் ஒழுங்குமுறை ஆணையமும் வலியுறுத்தியுள்ளது.

இருப்பினும் இந்த விதிமுறையை மீறி மின்பளு அளவுக்கான கட்டணத்தில் 90 சதவீதம் செலுத்துமாறு மின்வாரியத்திலிருந்து ரசீது அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரசீதுகளை திரும்ப பெற்று 20 சதவீத கட்டணத்துடன் புதிய ரசீது அனுப்ப உத்தரவிட வேண்டும். ஊரடங்கு அமலில் இருக்கும் வரை உயரழுத்த மின் இணைப்புக்கு 90 சதவீத கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் 20 சதவீத கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற மின் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மின்வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் மின்வாரியம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை மே 26-க்கு நீதிபதி ஒத்திவைத்தார். அதுவரை உயரழுத்த மின் இணைப்பு வாடிக்கையாளர்களிடம் ஏப்ரல் மாதத்துக்கான மின்கட்டணத்தை செலுத்துமாறு நிர்பந்திக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in