தென்னையில் வெள்ளை நோய் தாக்குதல்: தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விருதுநகர் விவசாயிகள் தவிப்பு

தென்னையில் வெள்ளை நோய் தாக்குதல்: தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விருதுநகர் விவசாயிகள் தவிப்பு
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள தென்னையில் வெள்ளை நோய் தாக்குதல் காரணமாக சாகுபடி குறைந்துள்ளது. அதோடு, தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

வறட்சி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 1.22 லட்சம் எக்டேரில் உணவு தாணியங்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், சுமார் 24 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்குத் தெடர்ச்சிமலையை ஒட்டி அமைந்துள்ள ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் அதிகமான அளவில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தென்னை சாகுபடியில் விருதுநகர் மாவட்டம் முக்கிய இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 250 டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. தற்போது தென்னையில் வெள்ளை நோய் தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் காய்ப்பின் அளவு பாதியாகக் குறைந்துள்ளது.

ஆனாலும், ஊரடங்கு காலத்தில் விவசாயிகளால் சொந்தமாக சந்தைக்கு கொண்டுவந்து தேங்காயை விற்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், இதை பயன்படுத்தி இடைத் தரகர்கள் அதிக லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் தேங்காய்க்கு ரூ.10 மட்டுமே கொடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமச்சந்திரராஜா, அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக வாடல் நோயால் தென்னை மரங்கள் பட்டுப்போனது.

தற்போது வெள்ளை நோய் தாக்குதலால் மகசூல் பாதியாகக் குறைந்துள்ளது. போலீஸார் மற்றும் அதிகாரிகள் கெடுபிடியால் நேரடியாக சந்தைக்கு தேங்காயை கொண்டுவந்து விற்பனை செய்ய முடியவில்லை.

இடைத்தரகர்களே அதிக லாபம் சம்பாதிக்கின்றனர்.

இந்நிலையைப் போக்க அரசே நேரடியாக விவசாயிகளிடமிருந்து தேங்காய் மற்றும் கொப்பரை கொள்முதலை தொடங்க வேண்டும். அதோடு, மகசூல் இழப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடமும் மனுக்கொடுத்துள்ளோம். இல்லையெனில் விவசாயிகளைத் திரட்டி பெரிய அளவில் விரைவில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in