10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா பரவல் இல்லை என்ற நிலை வரும் வரை 10-வது மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. ஒரு கட்டத்தில் 9-ம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வும், 12-ம் வகுப்பில் ஒரே ஒரு தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. 10-ம் வகுப்பின் அனைத்துப் பாடங்களுக்கும், 11, 12-ம் வகுப்பில் தேர்வு நடத்தப்படாத பாடத்திற்கும் ஜூன் 1-ம் தேதி முதல் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்தார்.

ஊரடங்கு விலகாத நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள அறிவிப்புக்குக் கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், குழந்தைகள் செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்நிலையில் இதை எதிர்த்து, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கரோனா தொற்று அதிகமாகி வருகிறது. 200 குழந்தைகளுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்குப் படிக்க வரும் பெரும்பாலான மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், தேர்வின்போது மாணவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குறி. எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டையும் செய்யாமல் தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்குக் கரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும்.

சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலையில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும்வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை நடத்தக் கூடாது. தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in