கயத்தாறு அருகே மும்பையில் இருந்து வந்த தம்பதிக்கு கரோனா

கயத்தாறு அருகே மும்பையில் இருந்து வந்த தம்பதிக்கு கரோனா
Updated on
1 min read

மும்பையில் இருந்து கயத்தாறு ஆத்திகுளம் கிராமத்துக்கு வந்த தம்பதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை மாநிலம் அந்தேரி பகுதியில் கயத்தாறு அருகே ஆத்திகுளத்தை சேர்ந்த குடும்பத்தினர் தங்கியிருந்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஊரடங்கு தொடர் வருவதால், ஆத்திகுளத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 6 பேர் கடந்த 10-ம் தேதி சொந்த ஊருக்கு காரில் வந்தனர். இதையறிந்த வருவாய், சுகாதாரத் துறையினர் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்தனர்.

இவர்கள் 6 பேருக்கும் நேற்று முன்தினம் சளி, ரத்த மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில், 58 வயது ஆணுக்கும், அவரது மனைவிக்கும் (வயது 53) கரோனா தொற்று இருப்பது நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது.

உடனடியாக வட்டாட்சியர் பாஸ்கரன் மற்றும் வருவாய், சுகாதாரத்துறையினர் ஆத்திகுளம் சென்றனர். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தம்பதியை பாதுகாப்புடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

மேலும், ஆத்திகுளம் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு போலீஸ் போடப்பட்டுள்ளது.

110 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட பகுதிக்கு பிற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்த 101 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவில்பட்டி வட்டாட்சியர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் நடத்திய ஆய்வில் 76 பேர் வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து வந்ததை கண்டறிந்து தனிமைப்படுத்தினர். மேலும், சுகாரத்துறையினர் அவர்களது மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபோல, கயத்தாறு வட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வட்டாட்சியர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் நடத்திய ஆய்வில், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் பிற மாநிலங்களான மும்பை, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 25 பேரை கண்டறிந்து தனிமைப்படுத்தினர். மேலும், அவர்களது மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in