

கரோனாவால் வருவாய் இன்றி முடிதிருத்தும் பணியாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். அவர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேயிடம், ஆதிதிராவிடர் முன்னேற்ற இயக்க தலைவர் ஜாண் விக்டர்தாஸ் தலைமையில் முடிதிருத்தும் பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதில்;
கன்னியாகுமரி மாவட்டத்தில் முடிதிருத்தும் வேலையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவிற்கு பின்னர் ஒன்றரை மாதத்திற்கு மேலாக வருவாய் இன்றி முடிதிருத்தும் பணியாளர்கள் தவித்து வருகின்றனர்.
நலவாரியத்தில் பதிவு செய்த பணியாளர்களுக்கு மட்டும் ரூ.2 ஆயிரம் கொடுக்கப்பட்டது. நலவாரியத்தில் பதிவு செய்யாத பல ஆயிரம் பேருக்கு இந்த நிவாரணம் கிடைக்கவில்லை.
தற்போது வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் முடி திருத்தும் பணியாளர்களின் குடும்பம் வறுமையில் வாடி வருகின்றது. வீட்டு வாடகை, கடை வாடகை போன்றவை கொடுக்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே முடி திருத்தும் பணியாளர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதியாக தலா ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது