

ஊரடங்கிற்கு முன் மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதியுதவி அளித்திருக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்பி தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஏழை மக்களுக்கு நிவாரண பொருட்களை சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் இன்று வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் சோ.பா.ரங்கநாதன், கிருஷ்ணராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கார்த்தி சிதம்பரம் எம்பி, செய்தியாளர்களிடம் கூறியதாவது, பூரண மதுவிலக்கு என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கையாகும். ஆனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலேயே பூரண மதுவிலக்கு இல்லை.
அரசியல் கட்சியின் சடங்கு, சம்பிரதாயம் எனும் வட்டத்திற்குள் இல்லாமல், எனது சொந்த கருத்தைச் சொல்கிறேன்.
முழுவதும் மதுவை தடை செய்யாமல் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மது ஆன்லைனில் விற்கலாம். அப்போது கள்ளச் சாராயம் போன்ற சட்ட விரோத நடவடிக்கைகள் தவிர்க்கப்படும்.
நாட்டில் கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் ஏழை மக்கள், சிறு தொழில் செய்வோர் ஆகியோருக்கு, ஊரடங்கிற்கு முன்பே நிவாரண நிதியுதவியை வழங்கியிருக்க வேண்டும். கீழே விழும் முன் பாராசூட் கொடுக்க வேண்டும்.
விழுந்தவுடன் பேண்டேஜ் போட்டு என்ன பயன். அதுபோன்றுதான் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. அதிமுக, முழுமையாக பாஜகவுடன் உள்ளது. அப்படி இருக்கும்போது ஏன் இவர்களால் ஜிஎஸ்டி வரியைக்கூட பெற முடியவில்லை.
எங்கள் கட்சியின் பல சிந்தனைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை அழைத்து ஆலோசைனை கேட்டிருக்கலாம்.
எம்.பி. தொகுதி வளர்ச்சி நிதியை ரத்து செய்தது பெரிய அநீதி.. ஊரடங்குக்கு முன் கால அவகாசம் கொடுத்திருந்தால் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றிருப்பர் என தெரிவித்தார்.