

வறுமையான குடும்பத்தில் உயரக் குறைபாடுடன் பிறந்ததால் இன்னும் வாழ்க்கையில் உயர முடியவில்லை என்று காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த தாயும், மகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி குயவன் குளத்துத் தெருவில் வசித்து வருபவர் சித்ரா, அவரது மகள் விசித்ரா. இருவரும் உயரக் குறைபாடு காரணமாக வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல முடியாமல், சொந்த வீடு கூட இல்லாமல் பல்வேறு இன்னல்களை அன்றாடம் சந்தித்து வருகின்றனர். பிளஸ் 2 தேர்வெழுதி தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் விசித்ரா, மேற்கொண்டு தான் படிக்க ஏதாவது கருணை ஒளி கிட்டுமா எனக் கவலையுடன் காத்திருக்கிறார்.
சித்ராவுக்கு தற்போது 42 வயதாகிறது. திருமணம் ஆகியிருந்தாலும் கூட குழந்தையும் உயரக் குறைபாடுடன் பிறந்ததால் கணவர் இவரைப் விட்டு பிரிந்து சென்றுவிட்டார். ஆனாலும் மனம் தளராமல் தனது மகள் விசித்ராவை பிளஸ் 2 வரை படிக்க வைத்துள்ளார். அறுவை சிகிச்சை செய்துள்ளதால் கடினமான வேலைகளும் செய்ய இயலாத நிலையில் உள்ளார். சில உள்ளங்களின் உதவியால் சாலையோரமாக உள்ள சிறு குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையால் வீடு முழுவதும் மழை நீர் ஒழுகியிருக்கும் நிலையில், இன்று (மே 13) சித்ராவைச் சந்தித்தபோது அவர் இந்து தமிழிடம் கூறியதாவது:
"கோட்டுச்சேரி தென்கரையில் வசித்து வரும் எனது பெற்றோர் சுப்ரமணியன்- அம்சவல்லி தம்பதியருக்கு ஒரே மகளாக 1978-ம் ஆண்டு பிறந்தேன். பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். குடும்பம் வறுமை நிலையிலிருந்தது.
பிறந்த சில மாதங்களிலேயே நான் உயரக் குறைபாடுடன் இருப்பதை பெற்றோர் அறிந்து கொண்டனர். உரிய சிகிச்சை எடுக்கவும் வசதியில்லை. நான் 10-ம் வகுப்பு வரை படித்தேன். ஃபெயில் ஆகிவிட்டதாலும், வறுமையாலும் மேற்கொண்டு படிக்கவில்லை.
வெளியூரிலிருந்து வந்து எங்கள் பகுதியில் வசித்து வந்த ஒருவரை 2001-ம் ஆண்டு 23 வயதில் திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்குப் பிறந்த மகளும் உயரக் குறைபாடுடன் உள்ள காரணத்தால் கணவர் என்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்.
வெளிநாட்டில் உள்ள ஒருவர் எங்களுக்கு உதவும் வகையில், கோட்டுச்சேரி குயவன் குளத்துத் தெருவில் உள்ள தனக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்துள்ளார். ஒரு அமைப்பின் சார்பில் சிறிய குடிசை வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு, அதில் வசித்து வருகிறோம்.
உயரக் குறைபாடுடன் இருப்பதால் பலரும் எங்களை வேடிக்கையாகவே பார்க்கின்றனர். அதனால் வெட்கப்பட்டுக் கொண்டு யாரிடமும் சென்று உதவிகள் கேட்பதில்லை. எனக்கும், என் மகளுக்கும் அரசு சார்பில் தலா மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதனைக் கொண்டுதான் குடும்பம் நடத்தி வருகிறோம்.
அருகாமைப் பகுதியில் நடைபெற்றால் மட்டும் 100 நாள் வேலைக்குச் செல்வேன். தூரமான பகுதிகளுக்குச் செல்ல முடியாது. சிரமப்பட்டு மகளை பிளஸ் 2 வரை படிக்க வைத்துவிட்டேன். என்னைப் போல கஷ்டப்படாமல் சொந்தக் காலில் நிற்கும் வகையில், எப்படியாவது அவளை மேற்கொண்டு படிக்க வைத்துவிட வேண்டும் என்பதே என் கவலையாக உள்ளது" என்றார்.
காலில் செருப்பு போடும் பழக்கமில்லாத சித்ரா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக செருப்பு போட்டு நடந்தபோது தடுமாறி விழுந்ததில் முதுகில் அடிபட்டு, புதுச்சேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அதன் பின்னர் கடுமையான வேலைகளைச் செய்ய முடியவில்லை என்று கூறும் அவர், இப்போதும் எங்கு சென்றாலும் கடும் வெயிலிலும் கூட செருப்பு அணியாமல்தான் சென்று வருகிறார்.
மகள் விசித்ரா கூறும்போது, "கோட்டுச்சேரி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வணிகவியல் படித்து தேர்வு எழுதியுள்ளேன். பள்ளியில் நண்பர்கள் உள்ளிட்ட யாரும் என்னைக் கேலியாகவோ, கிண்டலாகவோ பார்ப்பதில்லை. அனைவரும் என்னிடம் நல்ல முறையிலேயே பழகுவர். மேற்கொண்டு கல்லூரியில் பட்டப்படிப்பு, குறிப்பாக பி.காம். படிக்க வேண்டும் என்பதே என் ஆசை. ஆனால், பொருளாதார வசதியில்லை.
வறுமையான குடும்பத்தில் உயரக் குறைபாடுடன் பிறந்ததால் என் அம்மா பட்ட கஷ்டங்களைக் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தேன். சொந்த வீடும் இல்லை, வருமானமும் இல்லை. அந்த நிலை தொடராமல் இருக்க, நான் பட்டப்படிப்பு முடித்து வேலைக்குச் சென்று, நானும் சொந்தக் காலில் நின்று, அம்மாவையும் நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆசை" என்றார்.
சொந்த வீட்டுக்கான ஏற்பாடும், கல்விக்கான உதவியும் கிட்டுமானால் அந்தத் தாயின் எண்ணமும், மகளின் ஆசையும் ஈடேறும். உயர் கல்வி குறித்த உரிய முறையான வழிகாட்டுதலும் அந்த மாணவிக்கு அவசியமாக இருக்கிறது.