புதுச்சேரியில் இலவச அரிசி வழங்கும் பணியில் ஈடுபட மாட்டோம்; மறுக்கும் ஆசிரியர்கள்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மத்திய அரசு வழங்கிய இலவச அரிசியை சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தந்தது போல் மஞ்சள் அட்டைதாரர்களுக்கும் தரும் பணியில் ரேஷன் ஊழியர்களை ஈடுபடுத்தப் போவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இப்பணியில் இனி ஈடுபட மாட்டோம் என்று ஆசிரியர்கள் மறுத்துள்ளனர்.

புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இயங்காத சூழல் உள்ளது. ஏனெனில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 30 மாதங்களாக ஊதியம் தரவில்லை. ஏற்கெனவே புதுச்சேரி ரேஷன் கடைகளில் இலவச அரிசி மட்டுமே தரப்பட்டு வந்தது. அதுவும் தற்போது தரப்படாமல் வங்கிக்கணக்கில் பயனாளிகளுக்கு பணம் தர ஆளுநர் கிரண்பேடி உத்தரவு படி அமலானது. அப்பணமும் 22 மாதங்களாக காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றதிலிருந்து தரவில்லை.

அரிசிக்கு நிதி ஒதுக்கியும், அதற்கான பயனாளிகள் தொகை சரியாக தரப்படாதது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை நிலவி வந்தது. கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலாகி மக்களுக்கு இலவச அரிசி, பருப்பு தர மத்திய அரசு உத்தரவிட்டது. புதுச்சேரிக்கு அரிசி, பருப்பு மத்திய அரசு தந்தது.

ஆனால், ரேஷன் ஊழியர்கள் இல்லாமல் கல்வித்துறை, பொதுப்பணித்துறை மூலம் பேருந்துகளில் அரிசி எடுத்து சென்று பேக்கிங் செய்யப்பட்டு தரப்பட்டது. இதனால் கூடுதல் செலவும், காலதாமதமும் ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், மீண்டும் ரேஷன் ஊழியர்களை பயன்படுத்தாமல் முன்பு போலவே தர குடிமைப்பொருள் திட்டமிட்டுள்ளது.

இச்சூழலில், புதுச்சேரி ஆசிரியர் சங்க தலைவர் செங்கதிர், செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் ஆளுநர், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

"ஏப்ரல் 24 முதல் ஜூன் 3-ம் தேதி வரையிலான ஆசிரியர்களின் விடுமுறை கால கட்டத்தில் அரிசி மற்றும் பருப்பை மக்களுக்கு வழங்க முறைகேடாக உத்தரவு பிறப்பிக்கின்றனர். மீதமுள்ள மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி விநியோகிக்கும் பணிக்கு மீண்டும் ஆசிரியர்களையே பயன்படுத்த கல்வித்துறையில் ஆணை தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், குடிமைப்பொருள் வழங்கல் துறை பல பள்ளிகளில் அரிசிப் பைகளை இறக்கும் பணியை தொடங்கி விட்டது. இதனை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது. இனிவரும் காலங்களில் மேற்குறிப்பிட்ட பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்த முற்பட்டால் ஆசிரியர்களுக்கு 30 நாள் ஈட்டிய விடுப்பு அளிக்க வேண்டும். இல்லையென்றால் அப்பணியை செய்யமாட்டோம்" என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் அரிசி விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in