

புதுச்சேரியில் தனியார் தொழிற்சாலை தொழிலாளிக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், அவரது குடும்பத்தினர், அவருடன் பழகியோர், தொழிலாளர்கள், பேருந்தில் பயணம் செய்தோர் என நூற்றுக்கணக்கானோரை தனிமைப்படுத்தும் பணி மும்முரமாகியுள்ளது.
புதுச்சேரியில் 12 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 9 பேர் வீடு திரும்பினர். தற்போது புதுச்சேரி, காரைக்காலில் மொத்தம் மூவர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி அரும்பார்த்தபுரத்தைச் சேர்ந்த 36 வயது தனியார் நிறுவன தொழிலாளிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து, புதுச்சேரியில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நான்கானது. இவர் விழுப்புரம் ஒட்டியுள்ள புதுச்சேரி பகுதியான நெட்டப்பாக்கம் அருகேயுள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கு எப்படி நோய் தொற்று உருவானது என தெரியவில்லை. அதேநேரத்தில், அத்தொழிற்சாலையில் தமிழகப் பகுதியை சேர்ந்தோரும் அதிகளவில் பணிபுரிவதாக பலரும் குறிப்பிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சுகாதாரத்துறை விசாரணையை தொடக்கியபோது கடந்த 7-ம் தேதி அவர் பாண்லே பூத், சூப்பர் மார்க்கெட், ரெட்டியார்பாளையத்திலுள்ள எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு சென்று டிவி வாங்கியது, கனகன் ஏரி அருகே கோழிக்கறி வாங்கியது, நிறுவன பேருந்து மூலம் பணிக்குச் சென்று திரும்பியது தெரியவந்தது.
அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து அவர் சென்ற இடங்களில் இருந்தோரை அடையாளம் கண்டு நூற்றுக்கணக்கானோரை தனிமைப்படுத்தும் பணியினை சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இவர் பணிபுரியும் நிறுவன பேருந்தை தங்கள் பகுதி வழியாக செல்லக்கூடாது என்று கல்மண்டபம் பகுதியில் மறியலும் இன்று (மே 13) நடைபெற்றது.
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், "இனிமேல் புதுச்சேரி மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்தவிதத்திலும் கரோனா தொற்று வரலாம். அனைவரையும் பரிசோதிக்க முடியாது.
மக்கள் முகக்கவசம், கையுறை அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கிருமி நாசினி மூலம் கழுவி கொள்வது ஆகியவற்றை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதுபோல் தங்களது செல்போன்களில் 'ஆரோக்கிய சேது' செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.