திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
Updated on
1 min read

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. அவ்வப்போது ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது.

இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து இரவு வரை பரவலாக மிதமான மழை பெய்தது. இன்று காலை 8 மணி வரை திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 20 மி.மீ. மழை பெய்தது. சேர்வலாறில் 16 மி.மீ., நாங்குநேரியில் 3.50 மி.மீ., திருநெல்வேலியில் 3 மி.மீ., மணிமுத்தாறில் 2 மி.மீ., பாளையங்கோட்டையில் 1.40 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 1.20 மி.மீ., சேரன்மகாதேவியில் 1 மி.மீ. மழை பதிவானது.

தென்காசி மாவட்டம் கருப்பாநதி அணையில் 28 மி.மீ. மழை பதிவானது. செங்கோட்டையில் 23 மி.மீ., அடவிநயினார்கோவில் அணையில் 22 மி.மீ., குண்டாறு அணையில் 20 மி.மீ., தென்காசியில் 18.30 மி.மீ. ராமநதி அணையில் 10 மி.மீ., சிவகிரியில் 7 மி.மீ., ஆய்க்குடியில் 4.20 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது.

குற்றாலம் மலைப் பகுதியில் பலத்த மழை பெய்ததால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் நேற்று இரவில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இன்று காலையில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சாரல் சீஸனில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

சீஸன் காலத்தில் குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். கடந்த ஆண்டில் சாரல் சீஸனில் ஏற்பட்ட நீர் வரத்து தொடர்ந்து 8 மாதங்கள் நீடித்தது. வழக்கமாக கோடைக் காலத்தில் மழையால் அருவிகளில் நீர் வரத்து ஏற்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.

கரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அருவிகளில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், குற்றாலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வரவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in