

அரியலூரில் 300 குடும்பங்களுக்கு அதிமுக சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்துத் தரப்பு மக்களும் வீட்டில் முடங்கியுள்ள நிலையில், ஏழை, எளிய மக்களுக்கு அரசு மற்றும் தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அரியலூரில் 1-வது வார்டில் வசிக்கும் மக்களுக்கு அதிமுக சார்பில் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் அத்தியாவசியப் பொருட்களை இன்று (மே.13) வழங்கினார்.
இதில், 300 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, சோப், முகக்கவசம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை ரூ.3 லட்சம் மதிப்பில் வழங்கி, கரோனா பரவலைத் தவிர்க்க விலகி இருத்தல் அவசியம் எனப் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினார்.
மேலும், உடல்நிலை பாதிக்கப்பட்டால், மருந்தகத்தில் மருந்துகளை வாங்கி உட்கொள்ளாமல், மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவர்களை அணுக வேண்டும். அதேபோல், கரோனா வைரஸ் ஒழியும் வரை அனைவரும் தனிமனித இடைவெளியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.