

விழுப்புரத்தில் சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜெயபால். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முருகன் என்கிற அதிமுக பிரமுகருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி ஜெயபால் தரப்பை முருகன் தாக்கி வந்துள்ளார்.
சமீபத்தில் ஜெயபாலின் மகனை முருகன் தரப்பு தாக்கியதில் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மறுநாள் ஜெயபால் வீட்டில் இல்லாத நேரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகளை முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், சிறுமதுரை அதிமுக கிளை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து எரித்துவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
வீட்டிலிருந்து புகை வெளியே வந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், முருகன், கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னைத் தீவைத்து எரித்ததாக சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுகவிலிருந்தும் அவர்கள் நீக்கப்பட்டனர். தமிழக அரசு சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளது.
இந்நிலையில், கைதான இருவரும் ஆளும்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்களாக உள்ளதால், தமிழக காவல்துறை விசாரித்தால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஆவடியை சேர்ந்த சுமதி என்பவர் அரசுக்கு மனு அனுப்பினார்.
அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாததால், பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.