Published : 13 May 2020 02:21 PM
Last Updated : 13 May 2020 02:21 PM

உணவு அட்டைக்கு விண்ணப்பித்து அட்டை வழங்கப்படாத 71 ஆயிரம் குடும்பத்தாருக்கும் உணவுப்பொருள்: அமைச்சர் காமராஜ் தகவல்

புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களில் அங்கீகரிக்கப்பட்டு ஆனால் இதுவரை குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப் பெறாமல் உள்ள 71,067 குடும்பங்களும் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களைப் பெறலாம். இதற்காக சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் குறுஞ்செய்தி மூலம் தகவல் பெறப்பட்டு ஏதாவது ஒரு அடையாளத்தைக் காண்பிக்கலாம் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

உணவுத்துறை அமைச்சர். காமராஜ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல் துறை இயக்குநர், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவன நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித் தொகையாக தலா ரூ.1000/- வீதம் வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டு இதற்காக ரூ.2014.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 98.77% குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ரொக்க உதவித் தொகை வழங்கப்பட்டு விட்டது.

ஏப்ரல் முதல் ஜூன் முடிய AAY மற்றும் முன்னுரிமை (PHH) அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் விலையில்லாமல் அரிசி வழங்குவதற்கு மத்திய அரசால் ஆணையிடப்பட்டது.

எனினும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னுரிமை அல்லாத (NPHH) குடும்ப அட்டைதாரர்களுக்கும் நபர் ஒன்றுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதற்காக முதல்வரால் உத்தரவிடப்பட்டு 438 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 3 நபர்களுக்கு மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது அவர்கள் பெற்று வரும் அரிசி இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவற்றை 655.63 கோடி ரூபாய் செலவில் வழங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கண்டவாறு ஏப்ரல் மாதத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவித் தொகையாக ரூ. 1000/- வீதம் வழங்குவதற்கும், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் முடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை வழங்குவதற்கும் வழக்கமாக வழங்கப்படும் உணவு மானியத்தைக் காட்டிலும் கூடுதலாக 3108.33 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட விலையில்லா பொருட்கள் ஏப்ரல் மாதத்தில் 96.30% குடும்ப அட்டைதாரர்களுக்கும் மே மாதத்தில் நாளது தேதி வரை 73.37% குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள காலத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களில் அங்கீகரிக்கப்பட்டு ஆனால் இதுவரை குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப்பெறாமல் உள்ள 71,067 குடும்பங்களுக்கும் இந்த மாதம் முதல் சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் குறுஞ்செய்தி மூலம் தகவல் பெறப்பட்ட குடும்ப அட்டை குறியீட்டு எண் அல்லது ஆதார் எண் அல்லது கைபேசி எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து அத்தியாவசியப் பொருட்கள் பெற்றுக்கொள்ள ஆணையிட்டுள்ளதன் மூலம் தங்களுக்குரிய அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வருகிறார்கள்.

கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட நபர்கள் வசிக்கும் 845 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 2,92,912 குடும்ப அட்டைதாரர்களில் இதுவரை 2,16,120 குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் நியாய விலைக் கடைப் பணியாளர்களைக் கொண்டு நேரடியாக சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கு காரணமாக விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்கும் பொருட்டு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 24.03.2020-லிருந்து 11.05.2020 வரை அதாவது கடந்த 49 நாட்களில் மட்டும் 2,87,004 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து, இந்த ஆண்டு இதுவரை 22.51 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொள்முதல் ஆண்டில் மேலும் 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவானது நெல் கொள்முதல் வரலாற்றில் கடந்த ஆண்டுகளில் செய்யப்பட்ட அதிகபட்ச நெல் கொள்முதல் அளவை விட 20% கூடுதலாகும்.

மேலும், இந்த ஆண்டில் இதுவரை 3,76,606 விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயனடைந்துள்ளனர். விற்பனை செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை 4,257.73 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளின் மூலம் வழங்கப்பட்டுள்ளது”.

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x