Last Updated : 13 May, 2020 01:57 PM

 

Published : 13 May 2020 01:57 PM
Last Updated : 13 May 2020 01:57 PM

வாணியம்பாடியில் பழங்களைத் தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்து கடுமையாக நடந்துகொண்ட நகராட்சி ஆணையர்; வியாபாரிகளிடம் நேரில் மன்னிப்பு கோரினார்

வாணியம்பாடியில் வியாபாரிகளிடம் நடந்து கொண்ட செயல் வருத்தமளிப்பதாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரிடம் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் விளக்கம் அளித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து வாணியம்பாடியில் நேரக் கட்டுப்பாட்டுடன் சில தொழில்கள் நடைபெற மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

குறிப்பாக, கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் பொதுமக்கள் வெளியே நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான பொருட்கள் நகராட்சி நிர்வாகம் சார்பில் வீடு தேடிச்சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மே 11-ம் தேதி முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அரசு கூறியதைத் தொடர்ந்து, தடை செய்யப்பட்ட வாணியம்பாடி பகுதியிலும் வியாபாரிகள் தங்களது கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யத் தொடங்கினர்.

குறிப்பாக, ராமநாயக்கன்பேட்டை, நவாஸ்மேடு போன்ற பகுதிகளில் தேநீர் கடைகள், உணவகங்கள், ஜவுளிகடைகள், சாலையோர பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாலும் வியாபாரிகள் பொதுமக்களை அதிக அளவில் திரட்டி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸூக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நேற்று (மே 12) அங்கு சென்ற நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் தடையை மீறி வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரிகளை எச்சரித்து அங்கிருந்த தள்ளுவண்டியில் இருந்த பழங்களை கீழே தூக்கி வீசி தள்ளுவண்டியைச் சாய்த்தார்.

மேலும், பழக்கடைகளில் இருந்த பழங்களை நடுரோட்டில் தூக்கி வீசி அந்தக் கடைகளுக்கு சீல் வைத்தார். நகராட்சி ஆணையாளரின் இந்தச் செயலை சிலர் தங்களது செல்போனில் பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.

இதைக் கண்ட பலர் நகராட்சி ஆணையாளரின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். கரோனா தடுப்பு காலத்தில் ஏற்கெனவே வாழ்வாதாரத்தை இழந்துள்ள சிறு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நகராட்சி ஆணையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பலர் தங்களது கருத்துகளைப் பதிவிட்டனர்.

இதனிடையே, மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழியும் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த விவகாரம் நேற்று விஸ்வரூபம் எடுத்தது. இதைத் தொடர்ந்து, வேலூரில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என வாணியம்பாடி நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் இன்று (மே 13) காலை நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் விஜயகுமார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதில், பலமுறை எடுத்துக் கூறியும் தடை செய்யப்பட்ட இடங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால் ஒரு சில வியாபாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

செயலுக்காக வருத்தம் தெரிவித்த சிசில்தாமஸ்

இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் கலந்து பேசி, நகராட்சி ஆணையாளர் சிசில்தாமஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என மண்டல நிர்வாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

மேலும், தான் நடந்துகொண்டதற்காக வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள சிசில்தாமஸ், கோயம்பேடு போன்று வாணியம்பாடி பகுதியிலும் கரோனா பரவாமல் தடுப்பதற்காகத்தான் தான் அவ்வாறு நடந்துகொண்டதாகவும், அதற்காகத் தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட வியாபாரிகளை நேரில் சந்தித்து காய்கறி தொகுப்பு, மளிகைப் பொருட்களையும் வழங்கி மன்னிப்பு கோரினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x