

மானாவாரியில் துவரை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூலைப் பெற வேளாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் துவரை குழித்தட்டு நாற்றுகளைப் பெற்றுப் பயனடைய வேண்டும் என்று ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் ஆர்.மனோகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''ஓசூர் வட்டத்தில் துவரை உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடி அதிகரிக்க வேளாண்மைத் துறை சார்பில் பூதிநத்தம், சூதாளம், முகளூர், ஆவலப்பள்ளி, பஞ்சாட்சிபுரம், கொளதாசபுரம், பலவனப்பள்ளி, சூடுகொண்டப்பள்ளி, நந்திமங்கலம் மற்றும் முதுகானப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 1100 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரியாக துவரை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
துவரை உற்பத்தியைப் பெருக்கவும், சாகுபடி செலவைக் குறைத்து அதிக வருவாய் ஈட்டவும் சுயதேவையைப் பூர்த்தி செய்து கொள்ளவும், வேளாண்மைத் துறையின் மூலமாக துவரையில் பிஆர்ஜி-1, பிஆர்ஜி-2, பிஆர்ஜி-5 மற்றும் சிஓபி ஆகிய ரகங்கள் தற்போது விதைப்பு செய்ய ஏற்ற ரகங்களாக சிபாரிசு செய்யப்பட்டு வருகிறது. மேற்கண்ட விதைகள் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானிய விலையில் தற்போது விவசாயிகளுக்கு வேளாண்மை விரிவாக்க மையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த ரகங்களின் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு பிஆர்ஜி-1 மற்றும் பிஆர்ஜி-2 ரகங்களை நாற்றுகளாகக் குழித்தட்டு முறையில் விதைப்பு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரகத் துவரை சாகுபடியை அனைத்து விதமான பயிர்களின் வரப்பு ஓரங்களில் 3 அடி இடைவெளி விட்டு வரப்புப் பயிராகச் சாகுபடி செய்யலாம். இவை 150 செ.மீ. முதல் 200 செ.மீ. வரை உயரம் வளரும் தன்மையுடையது. 5 மாதங்களில் பூ பூக்கும். ஒரு செடியில் 3 கிலோ காய்களை அறுவடை செய்ய முடியும்.
மேலும் மகசூல் அதிகரிக்க துவரை சாகுபடி செய்த 45-வது நாளில் செடியின் நுனியைக் கிள்ளி விடுவதன் மூலமாக அதிக பக்கக் கிளைகள் தோன்றும். இதன்மூலம் அதிக பூக்கள் உருவாகி மகசூல் அதிகரிக்கும் (பச்சை காயாகவும் பருப்பாகவும் பயன்படுத்தலாம்). மேலும் 2சதவீதம் டீஏபி கரைசலை இலை வழியாகத் தெளிப்பதால் அதிக மகசூல் பெறலாம். குழித்தட்டு துவரை நாற்றுகள் தேவைப்படுவோர் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொள்ள வேண்டும்''.
இவ்வாறு ஓசூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.மனோகரன் தெரிவித்துள்ளார்.