Published : 13 May 2020 11:43 AM
Last Updated : 13 May 2020 11:43 AM

குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் கோரிக்கை

பொதுமுடக்கத்தால் குவைத்தில் வேலையின்றித் தவிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமிய சங்க பொதுச் செயலாளரான அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

இது அவசர, அவசியமான காரியம் என்பதால் மத்திய - மாநில அரசுகள் உரிய நடவடிக்கையைக் காலத்தே எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி இருக்கும் மனுவில் கூறியிருப்பதாவது:

''வேலைக்கான விசாக்கள் காலாவதியாகி சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாகக் கருதப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குவைத் அரசாங்கம் பொது மன்னிப்பு அறிவித்திருக்கிறது. ஆனாலும், சமூக ஆர்வலர்கள் இந்திய தூதரகத்திற்கு அனுப்பிய அவசரகால வெளியேறும் பாஸ்போர்ட்டுகள், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் பெரும்பாலானவருக்குக் கிடைக்கவில்லை. அத்தகைய புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குவைத் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சம்பந்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்க முடியவில்லை, இதனால் அவர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. வாடகை செலுத்தப்படாததால் தங்கள் குடியிருப்புகளைக் காலி செய்ய நிர்பந்திக்கப்பட்டு அவர்கள் திறந்தவெளி மைதானத்தில் தங்கும்படி கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர்.

சரியான உணவு மற்றும் குளியலறை வசதிகள் இல்லாமல் ஒவ்வொரு நொடியையும் அவர்கள் மிகவும் கஷ்டத்துடன் கடக்கிறார்கள். எனவே, இந்தியத் தூதரகம் இந்தியர்களால் நடத்தப்படும் இந்தியப் பள்ளிகளில் இவர்களுக்கு இடமளிக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதுபோன்று இரண்டு மாதங்களாக வேலை இழப்பு காரணமாக, குவைத்தில் சிக்கியிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்குக்கூடக் கையில் நிதியில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன், நீரிழிவு மற்றும் இருதய நோயாளிகளும் இந்தப் பிரிவில் வருவதால் தங்களுக்கான மருந்துகள் கிடைக்காததால் மோசமாகப் பாதிக்கப்பட்டு நிற்கிறார்கள்.

கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் தங்களது தங்குமிடங்களிலேயே தங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால் அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாததால், நோய்த்தொற்றுக்கு ஆளானவர்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவும் அபாயமும் நீடிக்கிறது.

குவைத்தில் கோடைக்காலம் தொடங்கவிருப்பதால், திறந்தவெளியில் தங்கவைக்கப்படுவோர் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடும். எனவே, இந்தியத் தூதரகம் மூலம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குவைத் அரசு மே 10 முதல் மே 30 வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதுவும் திறந்தவெளியில் இருப்போருக்கு அதிக சிரமங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த ஊரடங்கு காலத்தில் சமூக உதவிக்குழுக்கள் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதும் சாத்தியமில்லை. எனவே, அவர்களுக்கு உதவிக்கரம் கொடுக்க இந்தியத் தூதரகம் போர்க்கால அடிப்படையில் முன்வர வேண்டும்.

குவைத் வாழ் சமூக உதவிக் குழுக்கள், மருத்துவம் தொடர்பான உதவிகளைச் சரியான நேரத்தில் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதால், இந்தியத் தூதரகம் அவர்களின் சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். குவைத்தில் சிக்கியிருக்கும் நமது உறவுகள் இந்தியா திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, விமானக் கட்டணத்தையும் ஏற்கத் தயார் என்று குவைத் அரசே அறிவித்த பிறகும், தமிழர்களை அழைத்து வருவதில் தாமதம் கூடாது.

எனவே, உடனடியாக சிறப்பு விமானங்களை அனுப்பி குவைத் நாட்டில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர் உள்ளிட்ட அனைத்து இந்தியர்களையும் ஒரு வாரத்திற்குள் தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
இவ்வாறு பாகவீ தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x