

தமிழகத்தில் மதுவிலக்கை அமல் படுத்தாவிட்டால் முதல்வர் ஜெய லலிதா ராஜினாமா செய்யக்கோரி போராட்டம் நடத்துவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. ஆலந்தூர் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியதாவது:
மதுவை ஒழிக்க வேண்டும் என்பதற்காக காந்தியவாதி சசிபெருமாள் உயிர்த் தியாகம் செய்துள்ளார். அவரது மறைவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ளன. ஆனாலும் தமிழக அரசு மவுனமாக உள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தாவிட்டால் முதல்வர் ஜெயலலிதா ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டங்களை நடத்தும். மதுவிலக்கு அமலாகும் வரை காங்கிரஸின் போராட்டம் ஓயாது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முக்கிய சக்தியாக இருக்கும். காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படும்.
இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
வள்ளுவர் கோட்டம் அருகே தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்து அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு பேசியதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளால் மக்கள் சீரழிகின்றனர். இதற்கு அதிமுக அரசே பொறுப் பேற்க வேண்டும். அதிமுக அரசை தமிழக பாஜக விமர்சிக்கிறது. ஆனால், பிரதமர் மோடி முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கே சென்று அவரை சந்திக்கிறார். அதிமுகவும், பாஜகவும் ஒன்றுசேர்ந்து மக்களை ஏமாற்றுகின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வராதா? என மக்கள் ஏங்குகிறார்கள். வரும் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. அதில் காங்கிரஸின் பங்கு அதிகமாக இருக்கும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யம் தலைமையில் நடைபெற்ற உண்ணா விரதப் போராட்டத்தை காங் கிரஸ் தேசிய செயலாளர் சு.திருநாவுக் கரசர் தொடங்கி வைத்தார். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பழ ரசம் கொடுத்து முடித்துவைத்தார்.
ஆவடி நகராட்சி அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசினார்.