காப்பது மட்டுமல்ல; கண்ணீரைத் துடைப்பதும்தான்: உணவுக்கே வழியின்றித் தவித்த பெண்ணுக்கு உதவிய நாகை போலீஸ்

காப்பது மட்டுமல்ல; கண்ணீரைத் துடைப்பதும்தான்: உணவுக்கே வழியின்றித் தவித்த பெண்ணுக்கு உதவிய நாகை போலீஸ்
Updated on
1 min read

தங்களது கடமை மக்களைக் காப்பது மட்டுமல்ல... அவர்களின் கண்ணீரைத் துடைப்பதும்தான் என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கும் நாகை மாவட்டக் காவல்துறை, இந்தக் கரோனா காலத்தில் தங்களால் முடிந்தவரை மக்களுக்கு சேவைக்கரம் நீட்டி வருகிறது.

பொதுமுடக்கத்தில் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வீதியில் இறங்கிப் பணியாற்றிய நாகை காவல்துறையினர், கஷ்டப்படும் மக்களையும் கவனத்தில் கொண்டு செயல்பட்டனர். தகுந்த காரணங்களோடு வீட்டைவிட்டு வெளியில் வந்தவர்களை தாயுள்ளத்தோடு அரவணைத்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற உதவினர்.

அதேபோல் இப்போது, வறுமை காரணமாக அவதிப்படும் குடும்பங்கள் பற்றிய செய்திகள் அவர்கள் கவனத்துக்கு வந்தால் உடனே அந்தக் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்துவருகிறார்கள்.

வேதாரண்யம் அருகே கோவில்பத்து கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு உணவுத் தேவையைக் கூடப் பூர்த்திசெய்ய முடியாமல் அவதிப்படுவது குறித்த தகவல் மாவட்ட எஸ்பியான செ.செல்வநாகரத்தினம் கவனத்துக்கு வந்திருக்கிறது. இதையடுத்து, வேதாரண்யம் டிஎஸ்பியான சபிபுல்லாவுக்கு இந்தக் தகவலை அனுப்பி அந்தக் குடும்பத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்துகொடுக்கச் சொல்லி இருக்கிறார் எஸ்.பி.

இதையடுத்து இன்று அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்த சபிபுல்லா, தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து அந்தக் குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, காய்கனிகள், மளிகைப் பொருட்கள், முகக் கவசம், கையுறைகள், கிருமிநாசினி உள்ளிட்டவற்றுடன் அத்தியாவசியத் தேவைக்காகக் கொஞ்சம் பணத்தையும் வழங்கிவிட்டு வந்திருக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in