Last Updated : 12 May, 2020 05:18 PM

 

Published : 12 May 2020 05:18 PM
Last Updated : 12 May 2020 05:18 PM

புதிதாக குற்றச்செயல் புரிவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு: பல்வேறு அறிவுரைகளைக் கூறி எச்சரிக்கும் போலீஸ்- வாட்ஸ் அப் எண் வெளியீடு

ஊரடங்கால் புதிதாக குற்றச்செயல் புரிவோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 6 மணிக்கு முன்பாக வாசலில் கோலமிடுவது தவிர்த்தல் உட்பட பல்வேறு அறிவுரைகளைக் கூறி, காவல் துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வோர் காலை 6 முதல் 8 மணிக்குள் முடிக்கவேண்டும். பிரதான சாலைகளை தேர்ந்தெடுத்து நடக்கவேண்டும். குறிப்பாக பெண்கள் காலை 6 மணிக்கு முன்பாக வாசலில் கோலமிடுவதை தவிர்க்கவேண்டும்.

விலை உயர்ந்த நகை, ஆபரணங்களை வீடுகளில் வைக்காமல் வங்கி லாக்கர்களில் பாதுகாப்பாக வைக்கவேண்டும். வெளியில் செல் லும்போது, விலையுர்ந்த கைக் கடிகாரம், நகைகளை அணிந்து செல்லவேண்டாம்.

செல்போன், வங்கி கிரிடிட், டெபிட் கார்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். வெளியிடங்களுக்குப் போகும்போது, அதிக பணத்தை எடுத்துச் செல்லவேண்டாம்.

ஏனெனில் பழைய குற்றவாளிகள் மட்டுமின்றி, புதிதாக குற்றச் செயல்புரிவோர் வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.

வீடுகள், வர்த்தக நிறுவனங்களின் பிரதான கதவுகளுக்கு தரமான பூட்டுகளை போட்டு உறுதிப்படுத்துங்கள். தபால், தனியார் பார்சல் கொடுக்க வருவோரிடம் சற்று தள்ளி நின்று பொருட்களை வாங்குங்கள்.

வெளியிடங்களுக்கு போய்விட்டு வீடு திரும்பும்போது, ஆட்கள் நடமாட்டமுள்ள தெரு, சந்துகளில் செல்லுங்கள். குறுகிய பாதைகளில் செல்வதை தவிர்க்கவேண்டும்.

வெளியில் இருக்கும் சூழலில் உங்களை சுற்றியுள்ளவர்களிடம் ஒரு கண் இருக்கவேண்டும். இளைஞர்கள் தங்களது பகுதியை குற்றச் செயல்களில் இருந்து தடுக்க, கண்காணிப்பில் வைத்துக் கொள்ளவேண்டும்.

விலை மதிப்புள்ள பொருட்களை வாகனங்களில் வைக்கவேண்டாம். அந்நியர்களை வாகனங்களில் ஏற்றக்கூடாது. சிறப்பு வகுப்புகளுக்கு குழந்தைகளை பெற்றோர்களே அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் சிசிடிவி பொருத்தி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மதுரை நகர் காவல்துறையின் வாட்ஸ் அப் எண் (83000-21100) தங்களது செல்போனில் பதிவு செய்து, தகவல்களை பகிரவேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x