அனுமதிக் கடிதம் இருந்தாலும் அனுமதி இல்லை: எல்லையில் கேரள போலீஸ் கெடுபிடி

தமிழக - கேரள வாளையாறு எல்லைப் பகுதி.
தமிழக - கேரள வாளையாறு எல்லைப் பகுதி.
Updated on
2 min read

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பொதுமுடக்கம் வெகுவாகத் தளர்த்தப்பட்டுவிட்டாலும் தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் நடக்கும் பிரச்சினைகள் முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. தமிழகப் பகுதியிலிருந்து கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களுக்கும் அந்த மாநிலங்களிலிருந்து தமிழகப் பகுதிகளுக்குள்ளும் மக்கள் அனுமதிக்கப்படுவது என்பது சிரமத்துக்குரிய விஷயமாகியிருக்கிறது. குறிப்பாகக் கேரள போலீஸார் காட்டும் கெடுபிடிகள் மிக அதிகம் என்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்குச் செல்ல விரும்புபவர்கள் இரு மாநில அனுமதி பாஸ்கள் வைத்திருந்தாலும், கரோனா தொற்று பரிசோதனை செய்திருந்தாலும்கூட எல்லையைக் கடக்க போலீஸாரின் அனுமதி சுலபமாகக் கிடைத்து விடுவதில்லை. இதன் விளைவாக, மக்கள் சோதனைச் சாவடிகளைத் தவிர்த்து அடர் வனத்திற்குள் புகுந்து அடுத்த மாநிலத்திற்குள் நுழைவதும் அதிகரித்திருக்கிறது.

தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையிலான எல்லைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் என்.எச்-47 தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாளையாறு பகுதியில் இது தொடர்ந்து நடப்பதாகத் தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள். இதைத் தொடர்ந்து வாளையாறு பகுதியில் இரு மாநிலங்களும் பாதுகாப்பைப் பலப்படுத்தியிருக்கின்றன.

கோவையிலிருந்து கேரளம் செல்லும் மக்கள் மாநிலங்களுக்கிடையிலான அனுமதிக் கடிதம் வைத்திருந்தால் அந்தந்த மாநில எல்லைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயனும் அதை வலியுறுத்தியிருக்கிறார். எனினும், இந்த விஷயத்தில் தமிழகம் காட்டும் கருணையைக் கேரளம் காட்டுவதில்லை என்று புகார்கள் எழுந்திருக்கின்றன.

‘தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கேரளத்தில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, தமிழகத்திலிருந்து வருபவர்களை எக்காரணம் கொண்டும் உள்ளே விடவேண்டாம். அப்படியே முறையான பாஸ் வைத்திருந்தாலும்கூட, அவர்களைத் திருப்பியனுப்பி விடுங்கள்’ என கேரள போலீஸாருக்கு அங்குள்ள அதிகாரிகள் மறைமுக உத்தரவு பிறப்பித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அதனால் முறையான பாஸ் வைத்திருப்பவர்களைக் கூட 5 மணி நேரம், 6 மணி நேரம் காத்திருக்க வைப்பது, அந்தப் பாஸில் உள்ள தேதியைக் காரணம் காட்டி, ‘இது இந்த நாளுக்கு செல்லாது’ என்று திருப்பி அனுப்பிவிடுவது என்றெல்லாம் கேரள போலீஸார் கெடுபிடி செய்கிறார்களாம். தமிழகப் பகுதியில் பாதுகாப்பில் இருக்கும் போலீஸாரே இதை உறுதிப்படுத்துகிறார்கள். இதனால் உரிய பாஸ் உள்ளவர்கள் மட்டுமல்ல, இல்லாதவர்களும்கூட வாளையாறு ஆற்றுக்குள் (வறண்ட பகுதியில்) சென்று அடர் வனத்திற்குள் நுழைந்து, கேரளப் பகுதிக்குள் சென்றுவிடுகிறார்கள்.

வாளையாறு காடுகள் சிறுத்தை, யானைகள், காட்டெருமை என வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இப்படிப் பொதுமக்கள் வனங்கள் வழியாகச் செல்வது ஆபத்தானது. ஆனால், எவ்வளவு எச்சரித்தாலும் வனத்தை மக்கள் ஊடுருவுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் போலீஸார் வனத்திற்குள் அவ்வப்போது ரோந்து சென்று இப்படிச் செல்பவர்களைப் பிடிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

இதுகுறித்து வாளையாறு சோதனைச்சாவடியில் பாதுகாப்பில் இருக்கும் போலீஸார் சிலர் கூறுகையில், “வனப்பகுதி மற்றும் ரயில் பாதை வழியாகக் கேரளத்துக்குள் நுழைந்து செல்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். நேற்று மட்டும் இப்படிச் சென்ற 12 பேரைப் பிடித்து எச்சரித்ததுடன், கேரளப் பகுதிக்குள்ளிருந்து வந்தவர்களை கேரளத்திற்குள்ளும், தமிழகப் பகுதியிலிருந்து வந்தவர்களைத் தமிழகத்திற்குள்ளேயுமே திருப்பி அனுப்பினோம். அதேசமயம், இதைக்கூட கேரள போலீஸார் செய்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கேரளத்திற்குள்ளிருந்து தமிழ்நாட்டுக்குள் செல்பவர்கள் எப்படி வேண்டுமானால் செல்லட்டும் என்று நினைக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வருபவர்களை மட்டும் விடுவதேயில்லை. இதனால் வாளையாறு எல்லையில் கேரள போலீஸாருடன் கோவையிலிருந்து செல்பவர்கள் வாக்குவாதம் செய்வது என்பது வாடிக்கையாகவே ஆகிவிட்டது” என்றனர்.

இதுகுறித்து கேரள போலீஸாரிடம் பேசியபோது, “முறையான ஆவணங்கள் வைத்திருப்பவர்கள், மருத்துவப் பரிசோதனைகள் செய்துகொண்டவர்களையே அனுமதிக்கிறோம். தமிழகப் பகுதியைச் சேர்ந்தவர்களுக்குக் காய்ச்சல், சளி பாதிப்பு உள்ளதா என சரியாகக் கண்டறியாமல் அனுப்பி வைக்கிறார்கள். நோயாளிகள் யாரெனப் பரிசோதிக்காமல் அனுமதிச் சீட்டு தந்துவிடுகிறார்கள். நோய் பாதிப்பு குறித்த முறையான ஆவணம் இல்லாதவர்களை நாங்கள் அனுமதிப்பதில்லை. ஒருவர் பாஸ் வாங்கிவிட்டு அவர் குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் உடன் அழைத்து வருகிறார். இதையும் அனுமதிக்க முடியாது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அதிகம். சிலருக்கு இன்னும் சோதனைகள் நடக்காமல் இருக்கிறது. இவற்றுக்கு மத்தியில் இப்படி வனத்திற்குள் நுழைந்து வருபவர்களையும் தடுத்து திருப்பி அனுப்புகிறோம். இதில் தமிழகம், கேரளம் என்றெல்லாம் நாங்கள் பாரபட்சம் காட்டுவதில்லை” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in