

மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும் என்று தமிழக முதல்வருக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து வருபவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன். சமீபமாக டாஸ்மாக் திறப்புக்குக் கூட தமிழக அரசை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இன்று (மே 12) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளாகும். இதற்காக பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தமிழக முதல்வருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்".
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.