

மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்திலிருந்து ஆன்மிக சுற்றுலா வந்தவர்களை தேவையற்ற வழக்குகளைப்போட்டு தமிழக அரசு சிறையிலடைத்துள்ளது, அவர்களை விடுவிக்கவேண்டும் என மஜக பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த 130-வுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆன்மிக பயணிகளை கைது செய்து தமிழக அரசு சிறையிலடைத்துள்ளது.
விசா விதிமுறை தொடர்பான குழப்பம் மட்டுமே அவர்கள் மீதான பிரதான குற்றச் சாட்டாகும். ஆனால், சம்மந்தமில்லாத வழக்குகள் அவர்கள் மீது போடப்பட்டுள்ளது. தற்போது புழல் சிறையிலிருந்த அவர்களை எவ்வித வசதிகளும் இல்லாத சைதாப்பேட்டை கிளை சிறைக்கு மாற்றியுள்ளனர்.
அவர்கள் கடத்தல் கும்பலையோ, மாஃபியா கும்பலையோ சேர்ந்தவர்கள் அல்ல. பிறரிடம் மதப் பரப்புரை செய்ய வந்தவர்களும் அல்ல. அவர்கள் மிகவும் சாதுவான குணாதிசயங்களை கொண்ட ஆன்மீக சுற்றுலாவாசிகள் மட்டுமே.
ஈரோட்டில் கைது செய்யப்பட்ட பயணிகள் சிலர் ஜாமீன் பெற்று வந்துள்ளனர். அப்போதும் அவர்களை தடுப்பு முகாம்களில் தான் இருக்க வேண்டும் என சொல்வது ஏற்க முடியாதது. கர்நாடக மாநிலத்தில் அப்படி ஜாமீன் பெற்று வந்தவர்கள் அரசின் ஹஜ் இல்லத்தில் தான் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதை தமிழக அரசு கவனத்தில் கொள்வதோடு, வெளிநாட்டு ஆன்மீக பயணிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற்று, அவர்களை அந்தந்த நாட்டு தூதரகங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.