

கோடை சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் மருத்துவ இ-பாஸ் மூலம் வருகை தருவதால் கரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகக் கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஊரடங்குக்கு முன்னதாகவே சுற்றுலாத்தலங்கள், விடுதிகள் மூடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது, மேலும் போக்குவரத்து இயங்காததால் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வெளியூர்களில் இருந்து யாரும் வரமுடியாத நிலையில் இதுவரை கரோனா தொற்று இல்லாத பகுதியாக கொடைக்கானல் மலைப்பகுதி இருந்துவருகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் அருகே கூக்கால் மலைகிராமத்த சேர்ந்த நபர் ஒருவர் சென்னையிலிருந்து வந்துள்ளார். இவர் வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானல் செல்ல முயன்றபோது இவரை சந்தேகத்தின்பேரில் விசாரித்ததில் இவர் சென்னையில் இருந்து வந்தது தெரியவர இவரை உடனே போலீஸார் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனால் கொடைக்கானல் பகுதிக்கு தொற்று பரவுவது தவிர்க்கப்பட்டது.
தற்போது ஊரடங்கு உத்தரவு பல தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தளர்வுகளை பயன்படுத்தி கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வாகனங்களில் வருகைதருபவர்கள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக அதிகரித்துவருகிறது. ஊரடங்கு தளர்வை பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கோடை சீசனை அனுபவிக்க சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து பலர் கார்களில் புறப்பட்டுவருகின்றனர். இவர்கள் மருத்துவம் பார்க்க செல்கிறோம் என அந்தந்த மாவட்டங்களில் இ-பாஸ் பெற்று கொடைக்கானலுக்கு வருவது சில தினங்களாக தொடர்கிறது.
வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் வருகையால் கொடைக்கானல் மக்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக கொடைக்கானல் மலைப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நேற்று கடலூர் மாவட்டத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக திண்டுக்கல் செல்வதாக இ- பாஸ் பெற்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடைக்கானல் சென்றுள்ளனர். திண்டுக்கல் வரை மட்டுமே பாஸ் செல்லுபடியாகும் நிலையில் இவர்கள் செக்போஸ்ட்களை கடந்து கொடைக்கானல் வந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதேபோல் கொடைக்கானலில் பங்களா வைத்துள்ள சிலரும் மருத்துவம் பார்க்கச்செல்வதாக கூறி இ-பாஸ் பெற்று கொடைக்கானல் சென்று தங்கியுள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாதநிலையில், வெளிமாவட்ட மக்கள் வருகையால் தொற்று ஏற்படுவதை தவிர்க்க மலையடிவாரத்தில் உள்ள சோதனைச்சாவடியில் வெளிமாவட்ட நபர்களை அனுமதிப்பதை ஊரடங்கு முடியும் வரையாவது தவிர்க்கவேண்டும் என்பதே கொடைக்கானல் பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது.