

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் நெருங்கிவிட்டன. இந்த நிலையில், வாழ்வாதாரம் இழந்து உணவுக்கு வழியில்லாமல் அல்லாடும் மக்களுக்கு, மனிதநேயமுள்ளவர்கள் தங்களால் இயன்றதைக் கொடுத்து மக்களின் பசிபோக்கி வருகிறார்கள்.
ஒருதரப்பு மக்களுக்கு இப்போதுதான் பசி, பட்டினி ஆகியவற்றின் கொடுமை தெரிய வருகிறது. ஆனால், வள்ளலார் ராமலிங்க அடிகளார் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பே பசியையும் பட்டினியையும் உணர்ந்திருந்தார். பசியால் வாடும் மக்களுக்கு பசிப் பிணியைப் போக்க நிரந்தரமான ஏற்பாடுகளைச் செய்து வைத்திருக்கிறார் அதில்தான் எவ்வளவு மனிதநேயம், தொலைநோக்கு சிந்தனை மறைந்திருக்கிறது?
கடலூர் மாவட்டம் வடலூரில் 1867-ம் ஆண்டு, மே மாதம் 23-ம் தேதி அவர் ஏற்றி வைத்த அடுப்பு சாமானியர்களின் பசியைப் போக்குவதற்காக இன்னமும் எரிந்துகொண்டேதான் இருக்கிறது. இன்றைய தேதிக்கு தினமும் 1,300 முதல் 1,500 பேரின் பசியைப் போக்கி வருகிறது வள்ளலார் மூட்டிய இந்த அணையா அடுப்பு.
வழக்கமாக 600 பேர் வரை உணவருந்திய நிலையில், பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் மெல்ல மெல்ல எண்ணிக்கை அதிகரித்து இப்போது 1,500-ஐ நெருங்கியிருக்கிறது. முன்பு அனைவரையும் அமரவைத்து இலைபோட்டு உணவு பரிமாறப்பட்டது. தற்போது தனிமனித விலகல் கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் அனைவருக்கும் புதிதாகத் தட்டு வாங்கித் தரப்பட்டு அதில் உணவு வழங்கப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாகக்கூட இந்த சத்திய தர்ம சாலை அடைக்கப்படவில்லை.
"உலகத்தில் தர்மம் உள்ளவரை இந்த அடுப்பு அணையாது, இந்த அடுப்பு உள்ளவரை தர்மம் அணையாது" என்று வள்ளலார் சொன்னது போலவே தர்மத்தின் துணையால் அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது ஏழைகளுக்குச் சோறு படைக்கும் அடுப்பு. இந்தியாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில், தினந்தோறும் வழங்கப்பட்ட அன்னதானம் பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டது. ஆனால், வடலூர் தர்மசாலை மட்டும் எந்த ஒரு தடங்கலுமின்றி ஆதரவற்றவர்களின் பசிப்பிணியை அனுதினமும் போக்கிக் கொண்டிருக்கிறது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் நடக்க இயலாத முதியோர்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்துக்கே உணவு கொண்டு செல்லப்பட்டு, மூன்று வேளையும் வழங்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆதரவற்ற மக்கள் பலரும் தங்கள் பசிப்பிணியை அகற்ற வடலூர் இருக்கிறது என்று நம்புகிறார்கள். தங்கள் உறவுகள் தங்களைக் கைவிட்டாலும் சத்திய ஞான தர்மசாலை என்றும் தங்களைக் கைவிடாது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
154 ஆண்டுகளாக அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற எரிந்துகொண்டே இருக்கிறது வள்ளலார் ஏற்றி வைத்த அடுப்பு. அதை அணையாமல் காப்பாற்ற ஆயிரக்கணக்கான தர்ம சிந்தனையுள்ள நெஞ்சங்கள் அங்குள்ள தானியக் களஞ்சியங்களை நிரப்பிக்கொண்டே இருக்கின்றன.