

ஓசூர் நகரின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு கால்வாயில் கழிவுநீர் இன்றி வறண்ட நிலையில் வெளியில் தெரிந்த ஆஞ்சநேயர் ஐம்பொன் சிலையை போலீஸார் மீட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயக்கோட்டை சாலையில் காளேகுண்டா குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியைச் சுற்றிலும் எம்ஜிஆர் மார்க்கெட், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு அலுவலகம், ராகவேந்திரா கோயில் ஆகியவை உள்ளதால் எப்பொழுதும் வாகனங்கள் இயக்கம் மற்றும் மக்கள் நடமாட்டத்துடன் இப்பகுதி பரபரப்பாகவே உள்ளது.
இந்நிலையில் காளேகுண்டா குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் கோடை வெயில் தாக்கத்தினால் கழிவுநீர் இன்றி வறண்டது. இதன் காரணமாக ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலை ஒன்று வெளியில் தெரிந்துள்ளது. இந்த சிலையைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் இதுகுறித்து ஓசூர் நகரக் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின்படி குறிப்பிட்ட இடத்துக்குச் சென்ற போலீஸார் கால்வாயில் இருந்து ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை மீட்டனர்.
மிகவும் பழமையான இந்த ஐம்பொன் சிலை 1.50 கிலோ எடையில் 26 சென்டிமீட்டர் உயரத்தில், நின்ற நிலையில் ஆஞ்சநேயர் அருள்பாலிப்பது போல கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலையை ஓசூர் நகரக் காவல் நிலைய ஆய்வாளர் லட்சுமணதாஸ், ஓசூர் வட்டாட்சியர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தார்.
இந்த ஐம்பொன் சிலை வேறு பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டுக் கால்வாயில் வீசப்பட்டதா, சிலையைக் கால்வாயில் வீசிச் சென்றது யார் என்பது குறித்து ஓசூர் நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.