

தமிழகம் முழுவதும் கரோனா பரவல் தடுப்புப் பணியில் இருக்கும் காவல் அதிகாரிகள் உள்பட 150க்கும் மேற்பட்ட காவலர்களுக்குக் கரோனா பரவியுள்ள நிலையில், தற்போது கடலூர் மாவட்டத்தில் பயிற்சியில் உள்ள பெண் காவலர்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் காவல்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.
கடலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட 134 பெண் காவலர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் முன்னெச்சரிக்கை கருதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.
மேலும், அங்கு பணியாற்றிய ஓர் உதவி ஆய்வாளருக்கும், இரண்டு தலைமைக் காவலர்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இவர்கள் 13 பேரும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பயிற்சி நிறுத்தப்பட்டு பயிற்சியில் உள்ள எஞ்சிய 124 பெண் காவலர்களும் பயிற்சி மையத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மக்களோடு நேரடித் தொடர்பில் இல்லாத பயிற்சிப் பள்ளியில் பயிற்சியில் இருந்தவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது மாவட்டத்தில் பணியாற்றும் மற்ற காவலர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.