Published : 12 May 2020 11:55 AM
Last Updated : 12 May 2020 11:55 AM

பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது தொழிலாளர் வர்க்கத்துக்கு அநீதி: வைகோ கண்டனம் 

தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கு தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை, 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்; தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களை முடக்க தொழில்துறை கூட்டமைப்பு பரிந்துரைப்பது அநீதி என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

“கரோனா பேரிடரால் மூடப்பட்டு இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களை மீண்டும் இயக்கினால்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மெல்ல மெல்ல மீட்சி அடைய முடியும். கரோனா கொள்ளை நோய் பரவல், நாட்டின் 45 கோடி தொழிலாளர்களையும் முடக்கி இருக்கிறது.

வேலைவாய்ப்பு இன்றியும், வருவாயை இழந்தும் தவிக்கின்ற தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியதும், தொழிற்சாலைகளைப் படிப்படியாக இயங்கச் செய்வதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும்.

தொழில் நிறுவனங்கள் செயல்படவும், உற்பத்தி ஆலைகளை இயக்கவும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (Confedration on Indian Industries -CII) பிரதிநிதிகளுடன் மத்தியத் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் காணொலியில் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கு தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை, 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்; தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், தொழிற் தகராறுச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிற்சங்கச் சட்டம் மற்றும் தொழிற்சாலைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை முடக்கினால்தான் தொழிற்சாலைகள் சுதந்திரமாக இயக்கப்பட முடியும் என்று தொழிற்துறைக் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மத்திய தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பதும், 47 பேர் காயமடைவதும் நிகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டால் தொழிலாளர்களின் நிலைமை என்ன ஆகும்? பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ததால், சுமார் 9 கோடி தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரையும் பணிக்குத் திரும்ப அழைப்பதற்குப் பதிலாக, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது.

மத்திய பாஜக அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிப்பதும், சட்டபூர்வமான சலுகைகளை மறுப்பதும் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், கரோனா பேரிடரை காரணம் காட்டி, தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதும், தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிப்பதும், தொழிலாளர் வர்க்கத்த்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

எனவே மத்திய அரசு, இத்தகைய தொழிலாளர் விரோத கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x