

பொதுமுடக்கத்தால் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்ட தொழிலாளர்கள், பணிகள் தொடங்கியவுடன் திரும்பி வருவார்களா என்று பல நிறுவனங்கள் காத்திருக்கின்றன. மறுபுறம், மீண்டும் பழையபடி வேலை தொடங்குமா... நாம் அதில் பணிபுரிவோமா? என்ற கேள்விகளுடன் தொழிலாளர்களும் பரிதவித்துக்கொண்டிருக்கிறார்கள். வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணிபுரியும், ‘டாலர் சிட்டி’ என்று புகழப்படும் பனியன் நகரமான திருப்பூரில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
திருப்பூரில், பதிவுசெய்யப்பட்ட 932 ஏற்றுமதி பனியன் நிறுவனங்களும், 632 உள்நாட்டு பனியன் தயாரிக்கும் நிறுவனங்களும், இதன் சார்புத் தொழில்களைச் செய்யும் சுமார் 9,000 பனியன் நிறுவனங்களும் உள்ளன. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் சுமார் 1 லட்சம் பேர் வடமாநிலத் தொழிலாளர்கள். சுமார் 2.5 லட்சம் தொழிலாளர்கள் தமிழகத்தின் தென், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
பொதுமுடக்கத்தின் போது இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தத்தமது ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். எஞ்சியிருக்கும் தொழிலாளர்களில் பாதிப் பேரும் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பும்படி கோரிக்கை வைத்துப் போராடி வந்தனர். கடந்த சில நாட்களாக, ஆயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கரோனாவுக்கு முகக்கவசம், உடல் கவசம் (பிபிஇ) செய்வதற்கு சுமார் 100 நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது அரசு. இதன் மூலம் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பைப் பெற்று வருகிறார்கள். தற்போது தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறையுடன் பனியன் நிறுவனங்களை இயக்கலாம் என அரசு அறிவித்திருக்கும் நிலையில், சுமார் 60 நிறுவனங்கள் அதன்படி செயல்பட்டு வருகின்றன.
அந்த நிறுவனங்களுக்கு மட்டும்தான், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளைக் கடைப்பிடித்து இயங்கும் வசதி இருப்பதாகத் தொழில் முனைவோர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்றுமதி நிறுவனங்கள் வெளிநாடு ஏற்றுமதிக்கான சாம்பிள் ரகங்களை மட்டுமே செய்துவருகின்றன என்கிறார்கள். முகக்கவசம், உடல்கவசம், ஏற்றுமதி பனியன் சாம்பிள் ரகங்களில் எல்லாம் நிறுவனங்களுக்கு வருவாய் ஏதும் இராது. நம்பியிருக்கும் தொழிலாளர்கள் சில பேருக்கு மட்டும் வேலை கொடுக்க முடியும் என்ற நிலையே இருக்கிறது.
இந்த நிலையில்தான் திருப்பூரைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் புள்ளிகள், “தனிமனித இடைவெளி என்பது ஒரு வெளிப்படைத் தன்மைக்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதிமுறைகளை 100 சதவீதம் நீங்கள் பின்பற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நெளிவு சுளிவோடு எல்லா நிறுவனங்களையும் திறந்து நடத்தப் பாருங்கள். இல்லாவிட்டால் தொழில் சுத்தமாகவே முடங்கிவிடும்” என்று சொல்லிவருகிறார்களாம்.
தொழில் முனைவோர்களோ, “இதுவரை இருந்தது இருந்துவிட்டோம். அதற்குள் ஏன் அவசரப்பட வேண்டும்? மே 17 வரை இப்படியே இருக்கிறோம். தவிர, இப்போது வேன், பஸ் எதுவும் இல்லை. ஒரு பனியன் துணியைத் தைக்க, ஓவர் லாக் செய்ய, சாயமேற்ற, டையிங் செய்ய என்று தனித்தனி யூனிட்டுகளுக்கு வாகனங்கள் மூலம்தான் கொண்டுசெல்ல முடியும். அப்படிச் சென்றால் வழியில் அதிகாரிகள் பிடித்து நிறுத்துவார்கள். அவர்களை எல்லாம் சமாளித்து நாங்கள் தொழில் செய்வது கஷ்டம். அந்தத் தடைகளை எல்லாம் முதலில் நீக்கட்டும்” என்றனர்.
“அநேகமாக இவர்களுடைய கோரிக்கை 17-ம் தேதி நிறைவேற்றப்படும். பனியன் நிறுவனங்களும் திறக்கப்பட்டுவிடலாம். ஆனால், இப்போது ஊருக்குச் சென்றிருக்கும் தொழிலாளர்கள் எல்லாம் உடனே திரும்பி வருவார்களா? மீண்டும் இயல்பு வாழ்க்கை தொடங்கிய பின்பு கரோனா தொற்று அதிகமாகப் பரவி, திரும்பவும் கரோனாவுக்காக ஊரடங்கு உத்தரவு போட்டால் நிலைமை என்னவாகும் என்று பயந்து வராமல் இருந்துவிடுவார்களா?” என்று சந்தேகத்துடன் கேட்கிறார் பனியன் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர்.
ஆனால், பனியன் ஜாப் ஒர்க் நிறுவனம் நடத்திவரும் ஒருவரோ, “வடமாநிலத் தொழிலாளர்களில் கொஞ்சம் பேர் திரும்பி வருவதுதான் சிரமம். மற்றபடி, தென் மாவட்டத் தொழிலாளர்கள் பலரும் தொடர்ந்து தங்கள் முதலாளிகளுக்கு போன் செய்து, “கம்பெனி எப்போது திறக்கப்படும்... பஸ் எப்போது ஓடத் தொடங்கும்? இல்லை வேன் அனுப்புவார்களா... நாங்கள் வேலைக்கு வரலாமா?’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் நாளைக்கே பஸ் ஓடினால் போதும். நிறுவனங்கள் இயங்க ஆரம்பித்துவிடும். தொழிலாளர்களும் வந்துவிடுவார்கள். அந்த அளவுக்கு அவர்கள் வேலையில்லாமல், சம்பளம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்ல, பனியன் நிறுவனங்கள் மாதிரி சுளையாகச் சம்பளம் தரும் நிறுவனங்கள் அரிது. எனவே, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பனியன் நிறுவனங்கள் திறக்கப்பட்டால், தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் பணிசெய்யத் தொடங்கிவிடுவார்கள் என்று நிச்சயமாக நம்பலாம்” என்று நம்பிக்கையூட்டுகிறார்.