Published : 12 May 2020 10:32 AM
Last Updated : 12 May 2020 10:32 AM

ஆலயங்களை விரைந்து திறக்க தமிழக அரசு முன்வர வேண்டும்; தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்

ஆலயங்களை விரைந்து திறப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக எல்.முருகன் இன்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில், "படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்தி இயல்பு வாழ்க்கைக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் வழிவகை செய்துள்ளது மாநில அரசு. அதன்படி இன்று முதல் 34 வகையான கடைகளைத் திறக்க அனுமதியும் அளித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

மக்கள் பொருளாதார தேக்கத்தில் இருந்து மீளுவதோடு மட்டுமல்லாமல் தேவையற்ற அச்சங்களில் இருந்தும் மீள வேண்டும், மன நிம்மதி பெற வேண்டும். ஊரடங்கு காலம் பலருக்கு மனச்சோர்வையும் ஒருவித அச்சத்தையும் உருவாக்கியிருக்கிறது. இதற்கான தீர்வு ஆலய வழிபாட்டில்தான் உள்ளது.

எனவே, ஆலயங்களையும் விரைந்து திறப்பதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும். 'நெஞ்சுக்கு நிம்மதி இறைவன் சன்னதி' என்று சொல்வது போல இறைவன் தரிசனமே மக்களுக்கு அச்சத்தைப் போக்கி ஒரு வித நிம்மதியை அளித்து விடும்.

அதுமட்டுமல்ல, நமது ஆலயங்களும் பொருளாதார கேந்திரங்கள்தான். ஒவ்வொரு ஆலயத்திதையும் நம்பி, பூக்கடைக்காரர்கள், பிரசாதக் கடைக்காரர்கள், புத்தகக் கடைக்காரர்கள், புகைப்படக் கடைக்காரர்கள், தேங்காய் பழ வியாபாரிகள், பக்தி இசைத்தட்டு விற்பனையாளர்கள் என எண்ணற்ற வர்த்தகர்கள் இருந்து வருகின்றனர். இவர்களும் பொருளாதார தேக்கத்தில் இருந்து விடுபட வேண்டும்.

எனவே, மற்ற கடைகளைத் திறக்க அனுமதித்தது போல, இவர்களும் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட வேண்டுமெனில், ஆலயங்கள் திறக்கப்பட்டாக வேண்டும். இதனால், ஆலயத்தையே நம்பியிருக்கும் அர்ச்சகர்கள், பரிசாரர்கள், சமையல் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் ஆகியோருக்கும் கூட பொருளாதார வழி திறக்கும்.

ஆலயங்களில் நடக்கும் தினசரி வேள்விகள் தகுந்த வழிகாட்டு நெறிமுறையோடு நடத்தப்படும்போது அதுவே தொற்றுக்கு மருந்தாகவும் விளங்கக் கூடும். தரிசனத்துக்கான நபர்களை தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஒருவர் பின் ஒருவராக அனுப்பலாம். இவை தனிநபருக்கும் சமூகத்துக்கும் மிகுந்த ஆறுதல் தரலாம்!

எனவே, பக்தர்கள் நலன், ஆலயம் சார்ந்த ஊழியர்கள் நலன், ஆலயம் சார்ந்த வியாபாரிகளின் நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஆலயங்களை விரைந்து திறக்க முன்வருமாறு தமிழக அரசை வேண்டிக் கொள்கிறேன்" என முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x