

விழுப்புரத்தில் பள்ளி மாணவி கொல்லப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற ஒரு கொடூரமான செயல் நடைபெறாமல் இருக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (மே 12) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த கண்டனத்துக்குரியது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் சிறுமி ஜெயஸ்ரீ. சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தது மனிதாபிமானம் இல்லாத கொடூரமான செயல். அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் உயிரிழந்தார்.
தமிழக அரசு, இக்கொலைக் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும். குற்றம் செய்பவர்கள் காலம் தாழ்த்தாமல் தண்டிக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் என்ற நோக்கத்தில் நடவடிக்கைகளை எடுத்தால் குற்றங்கள் நடைபெறாது.
இனிமேல் தமிழகத்தில் இதுபோன்ற ஒரு கொடூரமான செயல் நடைபெறாமல் இருக்க அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயஸ்ரீயின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். ஜெயஸ்ரீயை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என வாசன் தெரிவித்துள்ளார்.