Published : 12 May 2020 07:37 AM
Last Updated : 12 May 2020 07:37 AM

ஊரடங்கு தளர்வு அறிவிப்பை தொடர்ந்து தேநீர் கடை உட்பட 34 வகை கடைகள் தமிழகத்தில் திறப்பு- பொதுமக்களின் ஆர்வமின்மையால் விற்பனை மந்தம்

சென்னை

தமிழகத்தில் தேநீர் கடை உட்பட 34 வகையான கடைகள் நேற்று திறக்கப்பட்டன. இருப்பினும் பொதுமக்கள் ஆர்வம் காட்டாததால் விற்பனை மந்தமாகவே இருந்தது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நேற்று முதல் தேநீர் கடைகள் உள்ளிட்ட 34 வகை கடைகளை திறக்க நகர்ப்புறம், கிராமப்புறங்களில் நேரக்கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று நோய் கட்டுப்பாட்டு பகுதி இல்லாத இடங்களில் இக்கடைகள் திறக்கப்பட்டன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களில் தேநீர் கடைகள் திறக்கப் பட்டாலும், பெரும்பாலான பகுதிகளில் ஒரு சிலர் மட்டுமே பார்சல் வாங்கிச் சென்றனர். சென்னை தியாகராய நகரில், வணிக வளாகங்கள் அல்லாத தனி ஜவுளிக்கடைகள் மற்றும் நகைக் கடைகள் நேற்று திறக்கப்பட்டி ருந்தன. அதே நேரத்தில் ரங்கநாதன் தெருவில் உள்ள பிரபல ஜவுளி மற்றும் நகைக் கடைகள் திறக்கப்படவில்லை. சாலையோர மற்றும் தள்ளுவண்டி கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தாலும், தியாகராய நகரில் மக்கள் கூட்டம் இல்லாததால் அந்த கடைகள் திறக்கப்படவில்லை. வட சென்னையில் பெரும்பாலான கடைகள் வளாகம் அல்லாத தனி கடைகள் என்பதால், அனைத்தும் திறக்கப்பட்டிருந்தன.

அதேநேரம் வேலூரில் பெரும் பாலான தேநீர் கடைகள் பார்சல் சேவையுடன் திறக்கப்பட்டதுடன், விலையும் குறைக்கப்பட்டது. டீ, காபி என அனைத்தும் ரூ.10க்கு விற்கப்பட்டது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் நகரப் பகுதிகளில் மட்டுமல்லாது கிராமப் பகுதிகளிலும் பெரும்பாலான தேநீர் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அதிகம் இருந்தது. கடைகள் அனைத்தும் திறந்திருந்ததால் சகஜநிலை திரும்பியதுபோல மக்கள் உணர்ந்தனர்.

மேற்கு மாவட்டங்கள்

கோவை, திருப்பூர் மாவட்டங் களில் நேற்று பெரும்பாலான தேநீர் கடைகள் திறக்கப்பட்டன. தொழில், வணிக நிறுவனங்களும் திறப்பட்டாலும், குறைந்த அளவிலான பொதுமக்களே டீ, காபி மற்றும் உணவுப் பொருட்களை பார்சல் வாங்கிச் சென்றனர். நீலகிரியில் கடைகள் திறக்கப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால் விற்பனை மந்தமாகவே இருந்தது. சேலத்தில், 60 சதவீதம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பெரும் பாலான இடங்களில் தேநீர் கடைகள் திறந்திருந்தன.

தென்மாவட்டங்கள்

மதுரையில் 4 மாசி வீதிகள், டவுன்ஹால்ரோடு, விளக்குத்தூண், காமராஜர் சாலை என முக்கிய பகுதிகளில் பெரும்பாலான கடைகள் திறக்கப் பட்டாலும் வாடிக்கையாளர்கள் கூட்டம் இல்லை. அதேபோல், விருதுநகர் பஜார், தெப்பக்குளம் சாலை, ராமநாதபுரம் அரண்மனை வீதி, பஜார், திண்டுக்கல் பெரியகடை வீதி, தேனியில் மதுரைசாலை, பெரியகுளம் சாலை, சிவகங்கை, காரைக்குடியில் மெயின் பஜாரிலுள்ள கடைகள் திறக்கப்பட்டிருந்தன. அங்கும் பொதுமக்கள் ஆர்வம் குறைவாகவே இருந்தது.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரியில் தேநீர் கடைகள் உள்ளிட்ட சிறுகடைகள் திறந்திருந்தன. இதுதவிர, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று காலை முதல் தேநீர் கடைகளில் கூட்டம் இருந்தாலும், தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டு பார்சல் வழங்கப்பட்டது. பிற கடைகள் திறந்திருந்தாலும் பொதுமக்கள் அதிகளவில் வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x