

கோயம்பேடு சந்தைக்கு மாற்றாக திருமழிசையில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தை நேற்று செயல்படத் தொடங்கியது. வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து சுமார் 300 லாரிகளில் காய்கறிகள் வந்த நிலையில், சென்னையில் காய்கறி விலை குறைந்தது.
கோயம்பேடு காய்கறி சந்தையில் பலருக்கு கரோனா தொற்று பரவிய நிலையில், கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. அதற்கு மாற்றாக பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
உடல் வெப்பம் பரிசோதனை
இதை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் தா.கார்த்திகேயன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் திறந்து வைத்தனர்.
அதைத் தொடர்ந்து அன்றுஇரவு 11 மணி முதல் சந்தைக்குகாய்கறிகள் வரத் தொடங்கின. அதிகாலை 4 மணிமுதல் மொத்த விற்பனை தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்துஆயிரக்கணக்கான சரக்கு வாகனங்களில் வந்த வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.
சந்தை நுழைவு வாயிலில் அனைத்து வாகனங்கள் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சந்தைக்குள் நுழையும் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. ஆங்காங்கே உயர் கோபுரங்கள்அமைத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சந்தைக்குள் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கெனவே போலீஸார் அறிவித்திருந்தனர்.
விற்பனை நேரம் உயர்வு
தற்காலிக சந்தை நிலவரம் குறித்து கோயம்பேடு மலர், காய்,கனி மொத்த வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:
கடந்த 5 நாட்களாக காய்கறிமொத்த விற்பனை நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 300 லோடு காய்கறிகள் வந்துள்ளன. வரத்து அதிக அளவில்இருந்ததால் காய்கறிகளின் விலை குறைந்தது. இங்கு குடிநீர், கழிப்பறை வசதிகள், தொழிலாளர்கள் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎம் வசதி கேட்டிருக்கிறோம். விற்பனை முடிக்கும் நேரம் காலை 8 மணி என்பதை காலை 10 மணி வரை உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருமழிசை சந்தை செயல்படத் தொடங்கிய நிலையில் சென்னையில் காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. கிலோ ரூ.70 வரை விற்கப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டது. அதேபோல் வெங்காயம் ரூ.30, பீன்ஸ் ரூ.80 என விலை குறைந்திருந்தது.
எடை இயந்திரம், காய்கறி பறிமுதல்
கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று ஏற்படுவதற்கு முக்கிய காரணமே அங்கு நிலவிய நெரிசல்தான். இந்நிலையில் திருமழிசை சந்தையிலும் மொத்த வியாபாரிகள் சிலர் சில்லறை விற்பனையில் ஈடுபட்டு நெரிசலை உருவாக்குகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகளிடம் கேட்டபோது, "ஒருசிலர் விதிகளை மீறி சில்லறை விற்பனையில் ஈடுபட்டனர்.அவ்வாறு விற்க வைத்திருந்த காய்கறிகள் மற்றும் எடை இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மீண்டும் தவறு செய்தால் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.