Last Updated : 11 May, 2020 09:58 PM

 

Published : 11 May 2020 09:58 PM
Last Updated : 11 May 2020 09:58 PM

குமரியில் கரோனாவிற்கு முதல் உயிரிழப்பு: சென்னையில் இருந்து வந்த முதியவர் மரணம்- தொற்று பரவலைத் தடுக்க பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் எரிவாயு மேடையில் உடல் தகனம்

நாகர்கோவில்

சென்னையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக குமரி வந்த முதியவர் கரோனா தொற்றால் உயிரிழந்தார். இதனால் குமரியில் முதல் கரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் எரிவாயு மேடையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் கட்டமாக 16 பேர் கரோனா தொற்று ஏற்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கிடையே சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர்களில் 6 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோய் தொற்று குறைவாகவே இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டம் ஆரஞ்ச் மண்டலத்தில் உள்ளது.

இதுவரை குமரியில் கரோனாவால் இறப்பு ஏதும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்த 63 வயது முதியவர் புற்றுநோய்க்கு சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 9ம் தேதி சொந்த ஊர் வந்தார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அவர் அன்று இரவு இறந்து போனார்.

அவரது ரத்தம், மற்றும் சளி மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதால் அவரது உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவருடன் ஆம்புலன்சில் வந்த மகளுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனாவால் முதியவர் இறந்ததை தொடர்ந்து அவரது உடல் நாகர்கோவில் புளியடியில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மேடையில் நோய் தொற்று பரவாமல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கரோனாவால் இறந்த முதியவரின் ஊரான மயிலாடி, மற்றும் சுற்றுப்புறங்கள் சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x