Published : 11 May 2020 09:14 PM
Last Updated : 11 May 2020 09:14 PM

விழுப்புரம் சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்: விஜயகாந்த் அறிவிப்பு

விழுப்புரத்தில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி ஜெயஸ்ரீயை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில், தீயில் கருகிய படுகாயமடைந்த மாணவி ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த மாணவி தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்தார்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்தக் கொடூரக் குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். மாணவியின் கொலையை அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் கண்டித்தனர். இந்நிலையில் கொலைச் சம்பவத்தைக் கண்டித்துள்ள தேமுதிக, சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிவிப்பு:

“விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த எரித்துக் கொல்லப்பட்ட ஜெயஸ்ரீயை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்”.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x