

தூத்துக்குடியில் இன்று பெய்த திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடியில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. ஏற்கெனவே ஊரடங்கால் வீட்டில் முடங்கிய மக்கள் கோடை வெப்பத்தால் தவித்து வந்தனர்.
கடந்த சில நாட்காளாக தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கூறி வந்த போதிலும் தூத்துக்குடியில் மழை எட்டி பார்க்கவில்லை. இதனால் மக்கள் கோடை மழையை ஆவலோடு எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் இன்று காலை முதலே தூத்துக்குடி பகுதியில் வெயில் இல்லாமல் இதமான சூழல் நிலவி வந்தது. காலை 10 மணியளவில் சிறிய தூறலாக ஆரம்பித்த மழை போகப்போக பலத்த மழையாகி சுமார் 30 நிமிடங்கள் பெய்தது.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை இருந்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் கோடை வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான வானிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.