

‘‘ஆன்லைனில் மது விற்பனையை தொடரலாம்’’ என்று கார்த்திக் சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.
மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில், ‘கரோனா’ ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் 400 பேருக்கு காய்கறி, மளிகைப்பொருட்கள், அரிசி வழங்கும் நிகழ்ச்சி இன்று கே.கே.நகரில் நடந்தது. சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டு இந்த நிவாரண உதவிகளை அந்த மக்களுக்கு வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு, ஊரடங்கை அறிவிக்கும்போதே தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களை பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கான தேவைகளை சேர்த்து அறிவிக்க வேண்டும்.
இங்கிலாந்தில் ஊரடங்கால் தொழிலாளர்கள் வேலையிழப்பை தவிர்க்கும் வகையில் சில திட்டங்களை அறிவித்தார்கள். ஆனால், இந்தியாவில் ஊரடங்கால் பாதிப்புக்குள்ளாகும் நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை. அதை மத்திய அரசு உறுதியும் செய்யவில்லை.
ஊரடங்கு சமயத்தை பயன்படுத்தி அதிகம் ‘கரோனா’ பரிசோதனை செய்திருக்க வேண்டும். தமிழகத்தில் கோயம்பேடு சம்பவத்திற்கு பிறகே பரிசோதனையை அதிகரித்துள்ளனர்.
தென்கொரியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் ‘கரோனா’ வைரஸை ஒரளவு கட்டுப்படுத்தி உள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் பரிசோதனைதான்.
மது விற்பனை விவகாரத்தில் என்னோட கட்சி கருத்துக்கும், எனது தனிப்பட்ட கருத்துக்கும் வேறுபாடு உண்டு. உலக அளவில் மதுவிலக்கு தோல்வியடைந்துள்ளது.
மது விலக்கால் கள்ளச் சந்தையில் மது விற்பனைக்கு வந்துதான் தீரும். அதனால், அரசு மது விற்பனையை கட்டுப்பாட்டோடு விற்கலாம். பணமில்லாத பரிவர்த்தனை, ஆன்லைன் மூலம் தொடர்ந்து மதுவை விற்கலாம்.
இந்த முறையை பின்பற்றியிருந்தால் கடந்த வாரம் 40 நாள் அரசு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு திறந்தபோது ஏற்பட்ட பெரிய கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம். டாஸ்மாக் கடை விஷயத்தில் ரஜினி கருத்தில் ஒன்று உண்மை.
அடுத்த முறை அதிமுக ஆட்சிக்கு வராது. திமுக-காங்கிரஸ் கூட்டணிதான் ஆட்சியைபிடிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை நகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சையது பாபு மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.