

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் மீண்டும் வேகமெடுத்துள்ளன.
தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.1000 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.926.23 கோடி மதிப்பீட்டில் 46 பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் சில பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. பெரும்பாலான பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. குறிப்பாக பேருந்து நிலைய விரிவாக்கம், 4 ஸ்மார்ட் சாலை அமைத்தல், 5 ஸ்மார்ட் பள்ளிகள் அமைத்தல், நவீன சலவைக்கூடம், மழைநீர் வடிகால், வாகன நிறுத்துமிடம், பூங்காக்கள், விளையாட்டு அரங்குகள் போன்ற பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் கரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டு பணிகளை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. சமூக இடைவெளியை கடைபிடித்து குறைந்த அளவிலான தொழிலாளர்களை கொண்டு பணிகளை தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 45 நாட்களுக்கு பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மீண்டும் தொடங்கின. சில பணிகளை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால், ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த பணிகள் முடிவடைய மேலும் சில மாதங்கள் ஆகும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.