

விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்கு உட்பட்ட சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆவார். கடந்த 10-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ஏசகன் (எ) கலியமூர்த்தி மற்றும் முன்னாள் கவுன்சிலர் கணபதி மகன் முருகன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயன்றுள்ளனர். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வரவே குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.
இந்நிலையில், தீயில் கருகிய படுகாயமடைந்த மாணவி ஜெயஸ்ரீயை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அந்த மாணவி தன்னை ஏசகனும், முருகனும் பெட்ரோல் ஊற்றி எரித்ததை நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அந்த மாணவி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த கொடூர குற்றச் செயலில் ஈடுபட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழ் மற்றும் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கைக் கையில் எடுத்த தேசிய குழந்தைகள் நல உரிமை ஆணையம் விழுப்புரம் ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதன் குழந்தைகள் உளவியல் மற்றும் சமூக நலன் உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் அனுப்பிய நோட்டீஸில், ''நடந்த சம்பவத்தை பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக அறிந்து குழந்தைகள் நல உரிமைச் சட்டம் 2005 பிரிவு 13(1)-ன் படி தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியை கொலை செய்த இரண்டு குற்றவாளிகள் மீதும் குழந்தைகள் நீதிச்சட்டத்தின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அளிக்கப்பட்ட சிகிச்சை, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த விவரங்களை விரிவான அறிக்கையாக 7 நாட்களுக்குள் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும்'' என உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் முனைப்பு காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டிய மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையம் தலைவர், உறுப்பினர்கள் இன்றி அலுவலகமே செயல்படாமல் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.