

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடு செய்யவும், வளர்ச்சிக்கான நடடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ள சி.ரெங்கராஜன் குழுவில் விவசாயப் பிரதிநிதிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பை ஈடு செய்யவும், வளர்ச்சிக்கான நடடிக்கைகளை மேற்கொள்ளவும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரெங்கராஜன் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலருக்கு அக்குழுவில் இடமளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கரோனாவால் விவசாயம் பெரும் பேரழிவைச் சந்தித்துள்ளது. அடுத்து சாகுபடிப் பணிகளைத் தொடங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயப் பிரதிநிதிகளையும் இக்குழுவில் இணைக்காதது பெரும் ஏமாற்றமளிக்கிறது. இதனை உணர்ந்து அக்குழுவில் விவசாயிகளுக்கும் இடமளிக்க வேண்டுமென முதல்வரை வலியுறுத்துகிறோம்.
மேலும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் தவணை செலுத்த மார்ச் முதல் மே இறுதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், நிலுவைத் தொகையைச் செலுத்த செல்லும் விவசாயிகளிடம் வட்டி, அபராத வட்டி சேர்த்துக் கட்டாய வசூல் செய்யும் நடவடிக்கையில் வங்கியாளர்கள் ஈடுபடுகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்த தமிழக அரசு மத்திய அரசின் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
2018 - 19 ஆம் நிதியாண்டில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் விடுபட்டு தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க மறுக்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், அதைக் கடன் நிலுவையில் வரவு வைத்து விவசாயிகள் வயிற்றில் அடிக்கின்றனர். இதனையும் தடுத்து நிறுத்த வேண்டும்.
அதேபோல், 2019-20 ஆம் ஆண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2011 ஜூன் 6-ம் தேதியே குறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்து உதவினார். அதனைப் பின்பற்றி நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். தண்ணீர் திறப்புக்கான தேதியை முன்கூட்டியே அறிவித்து சாகுபடிப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும்''.
இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.