

விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கொலை செய்த கொடியவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் - முன்னாள் கவுன்சிலர் முருகன் ஆகியோர் முன் பகை காரணமாக ஜெயபால் என்பவரின் மகளான பள்ளி மாணவியின் கை - கால்களைக் கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்து தீவைத்துக் கொளுத்திய கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டர் பதிவு மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் ட்விட்டர் பதிவு:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி முன் பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. இது கொடூரமான செயல். மகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
ஆயிரம் முன் பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்குக் காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.