

காரைக்கால் மாவட்டத்தில் முதல் முறையாக நேற்று ஒருவருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் திருநள்ளாறு காவல் நிலையம் மூடப்பட்டது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அருகே, சுரக்குடியைச் சேர்ந்த 37 வயது நபர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். ஓரிரு நாட்களுக்கு முன்னர் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு நபருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அது தொடர்பான புகாரின் பேரில் திருநள்ளாறு போலீஸார் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரைச் சிறையிலடைப்பதற்கு முன்னர் அவருக்குக் கரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிப்பதற்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் அவரிடமிருந்து சளி, உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று வந்த பரிசோதனை முடிவில் அவருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முதல் முறையாக ஒருவருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இதுவரை பச்சை மண்டலத்திலிருந்த காரைக்கால் மாவட்டம் ஆரஞ்சு மண்டலமானது.
இதையடுத்து சுரக்குடியில் அவர் வசித்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டது. அவரோடு நெருங்கிய தொடர்பிலிருந்த 8 நபர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்நிலையில் திருநள்ளாறு காவல் நிலையமும் மூடப்பட்டது. காவல் நிலையத்தில் பணியாற்றும் 25 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களிடமிருந்து விரைவில் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளன. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பகுதியில் உள்ள புறக் காவல் நிலையத்தில் தற்போது ஒருசில காவலர்களுடன் தற்காலிகமான வகையில் திருநள்ளாறு காவல் நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது.