

அனைவரையும் அவரவர் மாநிலம் அனுப்பும் வேலை நடக்கிறது. அதுவரை முகாம்களில் பொறுமையாக இருக்கவேண்டும் என புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கரோனா ஊரடங்கில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சந்திக்கும் பிரச்சினை புலம்பெயர் தொழிலாளர்களைக் கையாளுவதுதான். இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் கடிதமே எழுதியது. தமிழகத்தில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுகின்றனர்.
ஆரம்பத்திலேயே அவர்களுக்கான தங்கும் முகாம், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பராமரிக்க உத்தரவு எனப் பல நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்தது. ஆனாலும், பல இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசு புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் மாநிலத்துக்குச் செல்ல அனுமதித்தது. ஆனாலும் ரயில் கட்டணம் பிரச்சினை ஆனது. தமிழக அரசு ரயில் கட்டணத்தைத் தானே செலுத்த முன்வந்தது.
நேற்று தமிழகத்தில் சில இடங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் வந்து போராடினர். போலீஸார் கோரிக்கையையும் ஏற்கவில்லை. இதையடுத்து முதல்வர் பழனிசாமி இன்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கை
''வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களை விருப்பத்தின் அடிப்படையில், அவரவர் மாநிலங்களுக்கு, சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன், படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்துவிதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
இதுவரை 9 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 8 ரயில்களில் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் ரயில்கள் மூலம் அவரவர் மாநிலங்களுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, அதுவரை வெளிமாநிலத் தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் வைத்துள்ளார்.