

மே 12-ம் தேதி முதல் குறைந்த அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மே 12-ம் தேதி முதல் மெதுவாகக் குறைந்த அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. 15 இருவழிப்பாதை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில்கள் புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து திப்ருகார், அகர்தாலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, அகமதாபாத், புவனேஷ்வர், செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மத்கவான், மும்பை சென்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்முதாவி ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்களாக இருக்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
மார்ச் 25-ம் தேதி லாக் டவுன் காரணமாக அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டன. இந்த 15 ரயில்கள் சேவை தொடங்கிய பிறகு புதிய தடங்களில் மேலும் சில சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அதாவது கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் நோயாளிகளுக்காக 20,000 ரயில் பெட்டிகளை வார்டுகளாக மாற்றி ஒதுக்கிய பிறகும், புலம்பெயர்ந்தோர் சொந்த மாநிலங்கள் போய்ச் சேர தேவைப்படும் 300 ரயில்களுக்கான பெட்டிகள் போக மீதி ரயில் பெட்டிகள் இருப்பதை வைத்து புதிய தடங்களில் ரயில்கள் இயக்கப்படலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்த ரயில்வே துறையின் அறிவிப்பை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். அவரது ட்விட்டர் பக்கத்தில் இதை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“மாநிலங்களுக்கு இடையே பயணிகள் ரயில்களைத் தொடங்கும் முடிவை வரவேற்கிறேன். இதே போன்று பஸ், விமானப் போக்குவரத்தையும் தொடங்கவேண்டும்.
பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் உண்மையிலேயே தொடங்க வேண்டுமென்றால், பஸ், ரயில் மற்றும் விமானம் வாயிலாகப் பயணிகள் போக்குவரத்து மிக அவசியம்”.
நேற்று ப.சிதம்பரம், அரசின் முடிவை ஆதரிப்பதாகவும் எதிர்ப்பதாகவும் இல்லாமல் ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டார். ''ஊரடங்கின் கடைசி வாரம் தொற்று பரவுகிறது. இச்சூழ்நிலையில் நான் உங்களுக்கு என்ன சொல்ல முடியும் நம்பிக்கையோடு இருங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான அவரது பதிவு:
“மே 17 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கின் கடைசி வாரம் நாளை (திங்கள்கிழமை) தொடங்குகிறது. தொற்று பரவுகிறது. 3 சதவிகிதம் பேர் மரணமடைகிறார்கள், பொருளாதாரம் 100 சதவிகிதம் குலைந்துவிட்டது. ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்களும் சிறு, குறு தொழில்களும் சிதைந்துவிட்டன.
இச்சூழ்நிலையில் உங்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்ல முடியும்? நம்பிக்கையோடு இருங்கள், காலம் மாறும், காங்கிரஸ் கட்சி சொன்ன யோசனைகளை நாடும் அரசும் ஏற்றுக்கொள்ளும். விடியல் ஏற்படும். தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் கவனமாக, பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறேன்”.
இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.