

ஆண்டுதோறும் மே மாதம் கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து களைகட்டும் கொடைக்கானல் சுற்றுலாதலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் கூட்டம் இல்லாததால் மாசு குறைந்து மாசில்லா மலைப்பகுதியாக கொடைக்கானல் மாறிவருகிறது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் கோடை சீசனில் சுற்றுலாபயணிகள் அதிகம் வந்து தங்கிச்செல்வர்.
சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க அரசு கோடைவிழா, மலர்கண்காட்சி ஆகியவற்றை நடத்தும். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கிற்கு முன்னதாகவே சுற்றுலாத்தலங்கள், தங்கும் விடுதிகள் மூடப்பட்டன. இதனால் கடந்த 45 நாட்களுக்கு மேலாக கொடைக்கானலுக்கு சுற்றுலாபயணிகள் வருகை முற்றிலும் இல்லை.
ஆண்டுதோறும் கோடை சீசனான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தான் ஓராண்டுக்கான வருவாயை ஈட்டவேண்டும் என்ற நிலை கொடைக்கானலில் சுற்றுலாத்தொழிலை நம்பியுள்ள மக்களுக்கு உள்ளது.
ஆனால் இந்த ஆண்டு ஊரடங்கு பிறப்பிப்பால் தங்கள் வாழ்வாதாரம் முழுவதையும் இழந்துள்ளனர். கொடைக்கானல் மக்களுக்கு இது மூன்று மாத இழப்பு அல்ல, ஓராண்டு இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
மே 17 ஊரடங்கு முடிந்தாலும் மே மாத இறுதியில் நடைபெறும் மலர்கண்காட்சி, கோடைவிழா நடைபெற வாய்ப்பில்லை என்றே அதிகாரிகள் கூறுகின்றனர்.
கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களில் கடந்த ஆண்டு மே மாதம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம் காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அனைத்து இடங்களும் வெறிச்சோடிக்காணப்படுவது கொடைக்கானல் மக்களை வேதனையுறச்செய்துள்ளது.
இந்நிலையில் சுற்றுலாபயணிகளால் ஏற்படும் பாலித்தீன் குப்பைகள், வாகன போக்குவரத்து அதிகம் காரணமாக ஏற்படும் காற்று மாசு ஆகியவை முற்றிலும் குறைந்து மாசில்லாத கொடைக்கானலாக மாறியுள்ளது. ஊரடங்கு காலத்தில் இயற்கை தன்னை புதுப்பித்துக்கொண்டுவருகிறது.
அதிகபட்சமாக பகலில் 22 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக இரவில் 13 டிகிரி செல்சியசும் இதமான வெப்பநிலை நிலவுகிறது. இந்த ஆண்டு குளுமையை அனுபவிக்க முடியாத நிலையில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். ஆனால் இயற்கை ஒவ்வொரு நிலையிலும் தன்னை புதுப்பித்துக்கொண்டு வருகிறது.