

ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீஸாருக்கு விடுமுறை அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 45 நாட்களில் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றித்திரிந்ததாக 4 லட்சத்து 22 ஆயிரத்து 775 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 லட்சத்து 48 ஆயிரத்து 582 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். 3 லட்சத்து 69 ஆயிரத்து 799 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 4 கோடியே 86 லட்சத்து 74 ஆயிரத்து 179 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்களின் வாகனங்களை போலீஸார் தடை செய்வதில்லை. இன்று (மே 11) முதல்ஊரடங்கில் மேலும் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகம்கூடும் கடைகளில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை என்றால், அந்த கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர். மேலும், பாதுகாப்புப் பணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து, கரோனா பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த போலீஸாருக்கு விடுமுறை அளிக்கவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.