Published : 11 May 2020 07:00 AM
Last Updated : 11 May 2020 07:00 AM

வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்காக 3-வது நாளாக சிறப்பு ரயில்கள் இயக்கம்: இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளதாக ரயில்வே தகவல்

சென்னை

மாநில அரசின் அனுமதியோடு செல்லும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு தெற்கு ரயில்வே3-வது நாளாக நேற்றும் சிறப்பு ரயில்களை இயக்கியது. இவற்றின் மூலம் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள் ளனர்.

கரோனா தொற்று இல்லாத வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா வந்த பக்தர்கள் ஆகியோரை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து, அந்தந்த மாநில அரசுகளிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி,படிப்படியாக அவர்களை சொந்தஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாநில அரசுகளின் அனுமதியோடு

சிலர் தங்களது சொந்த செலவில்வாகன வசதிகள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். பெரும்பாலான மக்கள் வெளிமாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மாநில அரசுகளின் அனுமதியோடு ஜார்கண்ட், பிஹார், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாடுமுழுவதும் நேற்று மாலை நிலவரப்படி 366 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தெற்கு ரயில்வே சார்பில் தமிழகம், கேரளா மாநில அரசுகளின் அனுமதியோடு வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கடந்த 3 நாட்களாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல், காட்பாடி, கோயம்புத்தூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களில் இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் மூலம் நேற்று இரவுஅழைத்து வரப்பட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளே அழைத்துச் சென்ற ரயில்வே ஊழியர்கள், அவர்களை சிறப்பு ரயில்களில் அமர வைத்தனர்.

உணவு பொட்டலங்கள்

அதைத் தொடர்ந்து அவர்களுக்குத் தேவையான உணவு பெட்டலங்கள், குடிநீர், முகக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று இரவு ஆந்திராவுக்கு ஒரு சிறப்பு ரயிலும், மற்றொரு சிறப்பு ரயில் மணிப்பூருக்கும் புறப்பட்டுச் சென்றன. ஒவ்வொரு ரயிலும் 24 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.

சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்களுக்கு ஏற்பாடு செய்த தமிழக அரசு மற்றும் ரயில்வே துறைக்கு வெளிமாநிலத்தவர்கள் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x