அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு சம்பள நிறுத்தம்; சுய நிதி பிரிவு ஆசிரியர்களுக்கு சம்பள வெட்டு; மதுரையில் இப்படியும் ஒரு கல்லூரி

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
2 min read

மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில், அரசு உதவி பெறும் ஆசிரியர்களுக்கு சம்பள நிறுத்தம், சுய நிதி பிரிவு ஆசிரியர்களுக்கு சம்பள வெட்டு ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு உதவி பெறும் கல்லூரி அலுவலர் சங்கம் சார்பில் அதன் மதுரை மண்டல செயலாளர் பா.மனோகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

"மதுரையில் உள்ள நாகமலை நாடார் மகாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும். இங்கே அரசு உதவி பெறும் பிரிவில் 83 பேராசிரியர்களும், 28 அலுவலர்களும், சுய நிதிப் பிரிவில் 82 பேராசிரியர்களும், 88 அலுவலர்களும் ஆக 281 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைத்திடாமல் முழு ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவில் பணியாற்றும் 101 பேருக்கும் கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. ஊதியப்பட்டுவாடா அலுவலரான மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் தொடர்ந்து அறிவுறுத்தியும் கல்லூரி நிர்வாகம் ஊதியப் பட்டியலை வேண்டுமென்றே அனுப்பாமல் ஆசிரியர்கள், அலுவலர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

மேலும் சுயநிதிப் பிரிவில் பணியாற்றும் ஆசிரியர் அலுவலர்கள் 170 பேருக்கு 30 முதல் 50 சதவிகிதம் ஊதியம் வெட்டப்பட்டுள்ளது. அதையும் காலதாமதப்படுத்தி கடந்த 7.5.2020 அன்றே வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் நாளும் பணிக்கு வந்து 8 மணி நேரம் என்ற வழக்கத்துக்கு மாறாக 12 மணி நேரம் கட்டாய பணியாற்றிய காவலர்கள் மற்றும் தோட்ட பணியாளர்களுக்கும் கூட 30 சத ஊதியம் வெட்டப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ள இந்த சூழ்நிலையில் ஊதியத்தை மட்டும் நம்பியுள்ள பணியாளர்களுக்கு ஊதிய நிறுத்தம் மற்றும் சம்பள வெட்டு செய்திருப்பதால், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கே கூட கடும் சிரமத்தில் உள்ளனர்.

இந்த மாத ஊதியத்தில் ஒரு நாள் ஊதியத்தை தமிழ்நாடு அரசு முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக இசைவளித்திருந்தார்கள் ஆசிரியர்களும், அலுவலர்களும். இதுவரையில் ஊதியம் வழங்கப்படாததால், ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து முதல்வர் நிதிக்கு சென்றிருக்க வேண்டிய தொகையும் அரசுக்குச் செல்லாமல் தடைபட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகமும், உயர்கல்வித்துறை அதிகாரிகளும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். ஏற்கெனவே இந்த கல்லூரியில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது.

மாணவர், ஆசிரியர், அலுவலர் விரோதப்போக்கை கல்லூரி நிர்வாகம் தொடருமானால் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரி ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினரை ஒன்று திரட்டி தொடர் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in